தேசிய கல்வி கொள்கை எந்த மொழியையும் திணிக்கவில்லை | Dharmendra Pradhan | NEP | TN govt | DMK
பொறுப்புள்ளவர்கள் பொய் பரப்பி கல்வியை அரசியலாக்க வேண்டாம் தர்மேந்திர பிரதான் பதிலடி தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கான 2,152 கோடி ரூபாய் கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் பதிலுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழகத்திற்கு மும்மொழிக்கொள்கை தேவையில்லை, இருமொழிக் கொள்கையே போதும் என திட்டவட்டமாகக் கூறி வருகின்றனர். தமிழகத்திற்கான கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான், பதில் கடிதம் எழுதியுள்ளார். தேசிய கல்விக்கொள்கையை ஒரு மாநிலம் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது சரியல்ல. உலக அளவில் தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மொழியை பிரபலப்படுத்துவதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. தேசிய கல்விக்கொள்கை மொழி சுதந்திரத் தன்மை கொண்டது. மொழியைத் திணிக்கும் பேச்சுக்கு இடமில்லை. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. 1968ல் தொடங்கி இந்திய கல்வித் திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தாதது துரதிர்ஷ்டவசமானது. புதிய கல்விக் கொள்கையை தமிழகமும் அமல்படுத்த வேண்டும். மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நாம் வளர வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். கடிதம் தொடர்பாக விளக்கம் அளித்த தர்மேந்திர பிரதான், உலகளாவிய தேவை, புதிய உயரங்களை நோக்கிய இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு 34 ஆண்டுகளுக்கு பிறகு 2020 தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்தது. இதன் முக்கிய சாராம்சமே கல்வியில் உலகளாவிய தரத்தை கொண்டு வருவது தான். ஒருபுறம், எங்கள் லட்சியம் உலக தரத்தில் உலகளாவியதாக இருக்க வேண்டும். அதே நேரம் அது இந்திய நெறிமுறைகளை அடிப்படையாக கொண்டு வேரூன்ற வேண்டும். இது தமிழகம், தமிழ் மொழி போன்று மொழியியல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிக்க வேண்டும். மத்திய அரசு இந்தியாவின் அனைத்து முக்கிய 13 மொழிகளிலும் பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்துகிறது, அதில் ஒன்று தமிழ். தேசிய கல்வி கொள்கை எந்த மாநிலத்தில மாணவர்கள் மீதும் எந்த மொழியையும் திணிக்க பரிந்துரைக்கவில்லை. எந்த வகையிலும், தமிழகத்தில் இந்தி திணிப்பையும் பரிந்துரைக்கவில்லை. பொறுப்புள்ள நபர்களிடம் இருந்து இதுபோன்ற தவறான தகவல் பரப்பப்படக்கூடாது. தமிழகத்தின் மொழி மற்றும் பாரம்பரியத்தை போற்றுவதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக இருப்பதாகவும் தர்மேந்திர பிரதான் கூறினார்.