ரூ.200 கோடியில் திமுக அள்ளியது எவ்வளவு? பரபரப்பு தகவல் | DMK donations | ADR report | BRS donations
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில கட்சிகளும், ஒவ்வொரு நிதியாண்டிலும் திரட்டிய நன்கொடை விவரங்களை தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட நன்கொடை விபரங்களை ஏடிஆர் எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2022 -2023 நிதியாண்டில் மாநில கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள், யாருக்கு அதிக வசூல், எத்தனை கட்சிகள் முறையாக விவரங்களை தாக்கல் செய்தன என்பது உள்ளிட்ட விவரங்களை ஏடிஆர் வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,119 பேரிடம் இருந்து 216.765 கோடி ரூபாயை 28 கட்சிகள் நன்கொடையாக பெற்றுள்ளன. அதிக நன்கொடை வசூலித்த கட்சிகளின் பட்டியலில், தெலுங்கானாவின் பிஎஸ்ஆர் கட்சி முதலிடத்தில் உள்ளது. இக்கட்சிக்கு 154.03 கோடி ரூபாய் கிடைத்துள்ளது அடுத்தபடியாக, ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு 16 கோடி ரூபாயும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 11.92 கோடி ரூபாயும் கிடைத்துள்ளன. திமுகவுக்கு 7.22 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7.13 கோடி ரூபாய் வந்திருக்கிறது. மொத்த பட்டியலில் பிஆர்எஸ் கட்சி தான் இமாலய நன்கொடையை பெற்றிருக்கிறது. 70 சதவீத நன்கொடை அந்த கட்சிக்கு மட்டும் கிடைத்துள்ளது. அடுத்த இடங்களில் முறையே ஒய்எஸ்ஆர் காங், தெலுங்கு தேசம், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. மொத்த நன்கொடையில் 90.56 சதவீதம் முதல் 5 கட்சிகளுக்கு கிடைத்துள்ளன நன்கொடையில் 169 கோடி ரூபாய் பெருநிறுவனங்களிடம் இருந்தும், 45 கோடி ரூபாய் தனிநபர்களிடம் இருந்தும் பெறப்பட்டுள்ளது.