உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவில் பெரும் குழப்பம்! நடவடிக்கை இல்லை | DMK | Udhayanidhi

திமுகவில் பெரும் குழப்பம்! நடவடிக்கை இல்லை | DMK | Udhayanidhi

துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவாளர்களை கட்சி நிர்வாகத்தில் திணிக்க முயற்சிப்பதால் மாவட்ட வாரியாக அதிருப்தி கோஷ்டிகள் அதிகரித்து வருகின்றன. கட்சி, ஆட்சி என இரட்டை குதிரையில் சவாரி செய்யும் உதயநிதி, ஒரு சிலரின் பேச்சை கேட்டு எடுக்கும் முடிவு கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கட்சியினர் புலம்புகின்றனர். இதை சரி செய்ய முதல்வர் ஸ்டாலின் கட்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். கோஷ்டி பூசல்களை சரி செய்ய சாட்டையை சுழற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: விழுப்புரத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமணனுக்கு மாவட்ட செயலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை, விழுப்புரம் அறிவாலயம் அலுவலகத்தில் உள்ள மாவட்டச் செயலர் அறைக்கு அமைச்சர் பொன்முடி அனுமதிப்பதில்லை. அந்த அலுவலகத்தில் தான் மட்டும் இருந்து கோலோச்ச வேண்டும் என அவர் விரும்புகிறார். மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும் லட்சுமணனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க அச்சப்படுகின்றனர். இது விழுப்புரம் மாவட்ட திமுகவில் பெரும் குழப்பத்தை உருவாக்கி உள்ளது. இதற்கு தீர்வு காண உதயநிதியை சந்தித்து பேச மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் சென்றால் அவர்களை இரண்டு, மூன்று மணி நேரம் காத்திருக்க வைத்து இறுதியில் சில நிமிடங்கள் புகைப்படம் எடுத்து கொண்டு அனுப்பி விடுகிறார். உட்கட்சி பிரச்னையை சொல்ல முயன்றால் அதை கேட்காமல் அலட்சியமாக இருக்கிறார். அவரை சுற்றி இளைஞரணி நிர்வாகிகள் இரும்புத் திரையாக இருந்து கட்சியினரை சுதந்திரமாக சந்திக்கவிடாமல் தனிமைப்படுத்தி உள்ளனர். தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலர் தடங்கம் சுப்பிரமணி மாற்றப்பட்டு, தர்மசெல்வன் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் கலெக்டர், எஸ்பியை மிரட்டும் வகையில் பேசியதால் அவர் மாற்றப்பட்டார். புதிய மாவட்ட பொறுப்பாளராக மணி எம்பி நியமிக்கப்பட்டார். இதனால் அங்கும் தேவையில்லாமல் மூன்று கோஷ்டிகள் உருவாகி உள்ளன. புதுக்கோட்டை மாநகர செயலர் செந்தில் மறைவுக்கு பின், அப்பதவிக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களை நியமிக்க கட்சி தலைமையிடம் காய் நகர்த்தினர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவாளர் ராஜேஷை, மாநகர பொறுப்பாளராக நியமிக்க அமைச்சர் மகேஷ் ஏற்பாடு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் கோஷ்டியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தேர்தல் அனுபவம் இல்லாத நபரை, மாநகர பொறுப்பாளராக நியமித்தால், புதுக்கோட்டை தொகுதி திமுகவிற்கு கிடைக்காது என, கட்சி தலைமைக்கு மாவட்ட நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்படி பல மாவட்டங்களிலும் கோஷ்டி மோதல் அதிகரித்து வருகிறது என அவர்கள் கூறினர்.

மார் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி