ஈரோடு கிழக்கை டோட்டலா கைகழுவிய திமுக: காரணம் என்ன Erode east bypoll | DMK vs ADMK BJP | Erode east
ஈரோடு கிழக்கு சட்ட சபை தொகுதிக்கு, 2வது முறையாக பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தி.மு.க., சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சந்திரகுமார் போட்டியிடுகிறார். காங்கிரஸ் போட்டியிட்டால், அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட பிரதான கட்சிகள் போட்டியிட முடிவு செய்திருந்தன. ஆனால் தி.மு.க., களம் இறங்கியதால், அ.தி.மு.க., பா.ஜ., தே.மு.தி.க., த.வெ.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டன. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி மட்டும், ஆளுங்கட்சியை துணிச்சலுடன் எதிர்த்து களம் இறங்கி உள்ளது. அதிமுகவோ அல்லது பாஜவோ களம் இறங்கி இருந்தால், தி.மு.க., அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை அந்த தொகுதியில் குவிக்க செய்து தேர்தல் பணியாற்ற வைத்திருப்பார்கள். கட்சி நிர்வாகிகளுக்கு குறிப்பிட்ட ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கப்பட்டு, அதில் உள்ள ஓட்டுகளை வளைக்கும் பணியில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டிருப்பர். அமைச்சர்களும், தி.மு.க.,வினரும், பண பலம், படை பலத்துடன், தேர்தலில் வெற்றி பெற உழைப்பர். இந்த முறை அதிமுக, பாஜ ஒதுங்கிக்கொண்டதால் ஈரோடு கிழக்கை திமுக தலைமை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. 2023ல் திருமகன் ஈ.வெ.ரா., காலமானதை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது தான் அவரது தந்தையும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான இளங்கோவன் போட்டியிட்டார். அ.தி.மு.க., சார்பில் தென்னரசு போட்டியிட்டார். தி.மு.க., அமைச்சர்கள் 12 பேரும், 25க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களும், தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் இப்போதைய இடைத்தேர்தலை சந்திக்க, தி.மு.க., சார்பில் தேர்தல் பணிமனை சமீபத்தில் ஈரோடில் திறக்கப்பட்டது.