மூளும் இஸ்ரேல்-ஈரான் போர்: வெற்றி யாருக்கு? Israel vs Iran | US vs Iran | operation true promise 3
சுக்கு நூறாகும் இஸ்ரேல் நகரங்கள் பெரிய போரை அறிவித்தது ஈரான்! OPERATION TRUE PROMISE 3 பதற வைக்கும் பின்னணி டிரம்பின் 2ம் வருகை இஸ்ரேல்-ஹமாஸ், இஸ்ரேல்-ஹெஸ்புலா போரை நிறுத்திவிட்டது. ரஷ்யா-உக்ரைன் போருக்கும் முடிவுரை எழுத ஆரம்பித்து இருக்கிறது. எல்லாம் நன்றாக தானே போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கும் போது தான் மிகப்பெரிய இடியை இறக்கி இருக்கிறது ஈரான். அதாவது, ‛ஆப்பரேஷன் ட்ரூ பிராமிஸ்-3 என்ற பெயரில் தாக்குதல் நடத்தி மொத்த இஸ்ரேலையும் தரை மட்டம் ஆக்குவோம் என்று தடாலடியாக அறிவித்துள்ளது. இது பற்றி பேசிய ஈரான் ராணுவமான புரட்சிகர படையின் தளபதி இப்ராஹிம் ஜபாரி, ‛ஆப்பரேஷன் ட்ரூ பிராமிஸ்-3 உறுதியாக உண்டு. சரியான நேரத்தில் இஸ்ரேலை தாக்கி, டெல் அவிவ் மற்றும் ஹைபா நகரங்களை தரைமட்டமாக்குவோம் என்று கூறினார். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்துள்ளது. ஈரானுக்கு பதில் அளித்த இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன், ‛நம்மை அழிப்பதே தன் குறிக்கோள் என்று எதிரி கூறினால், அதை நம்ப வேண்டும் என்பதை வரலாற்றில் இருந்து யூத மக்களாகிய நாங்கள் கற்றுள்ளோம். ஈரானை திருப்பி அடிக்க நாங்களும் தயார் தான் என்று அதிர வைத்துள்ளார். ஈரானும், இஸ்ரேலும் மாறி மாறி அடிப்போம் என்று பேசி இருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது மத்திய கிழக்கையே கொழுந்து விட்டு எரிய செய்யும் மிகப்பெரிய போருக்கான அச்சாரம். இஸ்ரேல்-ஹமாஸ், இஸ்ரேல்-ஹெஸ்புலா போரெல்லாம் வெறும் ட்ரெய்லர் தான். இஸ்ரேலும் ஈரானும் மோதினால் அது தான் மெயின் பிக்சர். இந்த போரில் அமெரிக்காவின் ரோலும் பெரிய அளவில் இருக்கும். வேறு சில நாடுகளும் களம் இறங்க கூடும். இவ்வளவு பெரிய அபாயம் நேரும் என தெரிந்தும் இஸ்ரேலை தாக்குவோம் என்று ஈரான் அறிவிக்க என்ன காரணம்? ஒருவேளை இஸ்ரேலை ஈரான் அடித்தால் அடுத்து என்னென்ன நடக்கும்? போரில் யார் வெற்றி பெறுவார்கள்? என்பதை பார்க்கலாம். மத்திய கிழக்கில் ஈரானும் இஸ்ரேலும் எலியும் பூனையும் மாதிரி. ஒரிஜினல் சண்டை இவர்களுக்கு தான். ஹமாஸ், ஹெஸ்புலா, ஹவுதி எல்லாம் ஈரானின் பினாமி படை. இஸ்ரேலை நேரடியாக தாக்குவதற்கு பதில், இவர்களை வைத்து அடித்தது ஈரான். அப்படி தான் இஸ்ரேல்-ஹமாஸ், இஸ்ரேல்-ஹெஸ்புலா போர் வெடித்தது. இந்த போரில் இரு பங்கரவாத அமைப்புகளின் உச்ச தலைவன்களான இஸ்மாயில் ஹனியே, ஹசன் நஸ்ரல்லா, யாஹ்யா சின்வாரை அடுத்தடுத்து குண்டு வீசி கொன்றது இஸ்ரேல். அதிலும் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்தே தீர்த்துக்கட்டியது. இதெல்லாம் ஈரானுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. ஏற்கனவே கடந்த ஏப்ரலில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி இருந்தது. அதற்கு இஸ்ரேல் உடனடியாக பதிலடி கொடுக்கவில்லை. பின்னர் பினாமி படை தலைவர்களை இஸ்ரேல் போட்டுத்தள்ளியதற்கு பழிதீர்க்கும் விதமாக மீண்டும் அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேல் மீது கொடிய தாக்குதலை ஈரான் நடத்தியது. ஒரே நேரத்தில் சக்திவாய்ந்த 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசியது. 25 நாட்கள் காத்திருந்த இஸ்ரேல் அக்டோபர் 26ம் தேதி ஈரானில் புகுந்து பதில் தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் 100 போர் விமானங்களை ஈரானுக்குள் அனுப்பி குண்டு மழை பொழிந்தது இஸ்ரேல். 4 ஈரான் வீரர்கள் இறந்தனர். பல கோடி மதிப்பிலான ராணுவ கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டன. குறிப்பாக அணு உற்பத்தி மையங்கள், ஏவுகணை தயாரிப்பு கூடங்கள், தயாரித்து வைத்திருந்த ஏவுகணைகளின் பெரும்பகுதியும் அழிக்கப்பட்டன. இஸ்ரேலின் ருத்ரதாண்டவத்துக்கு பதிலடி கொடுத்தே தீருவோம் என்று ஈரான் சொன்னது. ஈரான் உச்ச தலைவர் கமெனியும் கிரீன் சிக்னல் கொடுத்தார். இஸ்ரேல் எந்த காலத்திலும் மறக்க முடியாத அளவுக்கு ஈரான் கொடுக்கும் பதிலடி இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவும் போட்டார். ஆனால் 4 மாதம் தாண்டி விட்டது. இதுவரை இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கவில்லை. இந்த பதிலடியை தான் இப்போது பெரிய அளவில் தரப்போவதாக ஈரான் கூறி உள்ளது. ஈரான் இவ்வளவு காலம் காத்திருந்ததற்கும் முக்கிய காரணம் டிரம்பின் 2ம் வருகை. இஸ்ரேல் எப்படி ஈரானுக்கு எதிரியோ, அதே போல் இஸ்ரேலின் பெரிய கூட்டாளியான அமெரிக்காவும் ஈரானுக்கு எதிரி. அதிலும் டிரம்ப் என்றால் ஈரானுக்கு பரம எதிரி. காரணம் இவர் முதல் முறை அதிபராக இருந்த போது, ஈரான் படை தளபதி காசிம் சுலைமானியை போட்டுத்தள்ளினார். காசிம் சுலைமானி சாதாரண ஆள் இல்லை. ஈரான் உச்ச தலைவர் கமெனிக்கு அடுத்து சக்தி வாய்ந்த நபராக திகழ்ந்தார். ஈரான் புரட்சிகர காவல் படையின் வெளிநாட்டு நடவடிக்கை பிரிவான குட்ஸ் படையின் தளபதியாக காசிம் சுலைமானி இருந்தார். ஈரானின் பினாமி படைகளான ஹமாஸ், ஹெஸ்புலா, ஹவுதி, இஸ்லாமிய ஜிகாதிகளுக்கு ஆயுத உதவி, நிதி உதவி, இதர உதவிகள், உளவு தகவல்கள், அசைன்மென்ட்கள் கொடுக்கும் முக்கிய பொறுப்பை கவனித்தார். பாக்தாத் ஏர்போர்ட் அருகே நடந்த ட்ரோன் அட்டாக்கில் காசிம் சுலைமானி உட்பட 18 பேரை அமெரிக்கா கொலை செய்தது. காசிம் சுலைமானி மரணம் ஈரானை உலுக்கிப்போட்டது. டிரம்பை கொலைகாரன் என்றும் தங்கள் நாட்டில் தண்டனை பெற வேண்டிய குற்றவாளி என்றும் ஈரான் சொன்னது. இதில் இருந்து தான் டிரம்ப் ஈரானின் பரம எதிரியாக மாறினார். அதிபர் தேர்தலுக்கு முன்பு 2, 3 முறை டிரம்பை படுகொலை செய்ய சதி திட்டம் நடந்தது. இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே ஈரான் மீது டிரம்புக்கு ஆத்திரம் அதிகம். கொலை முயற்சிக்கு பிறகு அது பல மடங்கு அதிகரித்து விட்டது. இப்படிப்பட்டவர் மீண்டும் அமெரிக்காவில் அதிகாரத்துக்கு வந்ததால் ஈரான் அதிர்ச்சி அடைந்தது. இஸ்ரேல் மீது நடத்த வேண்டிய தாக்குதலை தற்காலிகமாக ஒத்தி வைத்தது. இடைப்பட்ட காலத்தில் தொடர்ந்து போர் ஒத்திகை நடத்தி வந்தது. வார வாரம் புதிய புதிய ஆயுதங்களை அறிமுகம் செய்து வந்தது. தங்களிடம் இருக்கும் ஏவுகணை குவியலை வீடியோவாக வெளியிட்டு அமெரிக்கா, இஸ்ரேலை அச்சுறுத்தியது. இந்த நிலையில் தான் டிரம்ப் அதிபர் ஆனதும் உலகின் முதல் தலைவராக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசினார். அப்போது ஈரானின் அணு உற்பத்தி மையங்களை தாக்கி அழிக்க இஸ்ரேலுக்கு அவர் அசைன்மென்ட் கொடுத்ததாக தகவல் வெளியானது. இது ஈரானை தூக்கிவாரிப்போட்டது. உள் நாட்டுக்குள் எல்லா விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஈரான் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் முந்தும் முன்பு, நாம் முந்தி விட வேண்டும் என்று ஈரான் கணக்கு போட்டிருக்கலாம். எனவே தான் ஆப்ரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3 பற்றி இப்போது வெளிப்படையாக பேசி இருக்கிறது ஈரான் என்று சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு வேளை ஈரான் சொன்னது போல் இந்த முறை இஸ்ரேலை ஈரான் தொட்டால் அது மிகப்பெரிய போரை கொண்டு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முதல் விஷயம் பைடன் போல் டிரம்ப் கிடையாது. பைடனை விட பல மடங்கு வீரியமாக ஈரானை எதிர்ப்பவர் டிரம்ப். தன்னை கொலை செய்ய முயன்றால், ஈரானை இருந்த இடம் தெரியாமல் அழித்து விட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவு போட்டு இருப்பதாக சமீபத்தில் டிரம்ப் கூறி இருந்தார். எனவே இஸ்ரேல் மீது ஈரான் கை வைத்தால் அதை டிரம்ப் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார். நிச்சயம் நேரடியாக அமெரிக்க ராணுவம் களத்தில் இறங்கும். அப்படி இறங்கினால் ஈரானுக்கு மிகப்பெரிய அடி விழும். ஏற்கனவே இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை ஈரான் வீசிய போது, அயர்ன் டோம், ஆரோ உள்ளிட்ட ஏவுகணை தடுப்பு கவசம் மூலம் இஸ்ரேல் சமாளித்தது. பெரிய அளவில் சேதம் இல்லை. ஆனால் இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஈரான் நிலை குலைந்து விட்டது. நிலைமை இப்படி இருக்க இஸ்ரேலுடன் அமெரிக்காவும் நேரடியாக களம் இறங்கினால் ஈரான் பாடு திண்டாட்டமாகி விடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த முறை தங்கள் நாட்டில் இருந்து மட்டும் அல்ல; சிரியா, ஏமன், ஈராக்கில் இருந்தும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இதற்காக 3 நாடுகளிலும் ஈரான் தயவில் செயல்படும் ஹவுதி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் ராணுவ தளங்களுக்கு ஏற்கனவே ஈரான் ஆயுதங்களை கடத்தி விட்டது. 3 நாடுகளில் இருந்தும் ஒரே நேரத்தில் இஸ்ரேலை நோக்கி சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈரான் ஈடுபட உள்ளது. ஒரே நேரத்தில் 4 இடங்களில் இருந்து தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் நிலைகுலைந்து விடும் என்று ஈரான் கணக்கு போட்டுள்ளது. அதே நேரம் எங்கிருந்து ஏவுகணைகள் வந்தாலும் அவற்றை வானிலே இடைமறித்து அழிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் முழு வீச்சில் தயாராகி விட்டது. தங்கள் வசம் ஏற்கனவே உள்ள அயன் டோம், டேவிட் ஸ்லிங், ஆரோ போன்ற தடுப்பு கவசங்களை மட்டும் இன்றி, அமெரிக்காவின் தாட் என்ற ஏவுகணை தடுப்பு சிஸ்டத்தையும் இஸ்ரேல் நிலை நிறுத்தி உள்ளது. அது மட்டும் அல்ல ஈரானை மிரட்டும் வகையில் போர் கப்பல்கள், போர் விமானங்களையும் மத்திய கிழக்கில் அமெரிக்கா நிலை நிறுத்தி இருக்கிறது. ஈரானின் ஏவுகணைகள், ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக தடுத்து விட்டு, பின்னர் ஈரானை திருப்பி அடிப்பது தான் இஸ்ரேல், அமெரிக்காவின் திட்டமாக இருக்கும். இந்த போரில் ஈரானுக்கு ஆதரவாக அதன் பினாமி படைகளும் சில முஸ்லிம் நாடுகளும் அணி திரள கூடும். இருப்பினும் வெற்றி இஸ்ரேல், அமெரிக்காவுக்கு தான் கிடைக்கும் என்று சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.