இந்தியா மீது உலகின் பார்வை மாறியிருக்கிறது: ஜெய்சங்கர் jaishankar| pm modi| operation sindoor| rajya
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த இந்தியாவின் முடிவு பற்றி பேசினார். சிந்து நதிநீர் ஒப்பந்தம் பல வழிகளில் மிகவும் தனித்துவமான ஒப்பந்தம். ஒரு நாடு தனது முக்கிய நதிகளை அடுத்த நாட்டுக்கு, அந்த நதியின் மீது உரிமைகள் இல்லாமல் பாய அனுமதித்ததாக எந்தவொரு ஒப்பந்தத்தையும் நினைத்து பார்க்க முடியாது. இது ஒரு அசாதாரண ஒப்பந்தம். அதைநாம் நிறுத்தி வைக்கும்போது, இந்த நிகழ்வின் வரலாற்றை நினைவு கூர்வது முக்கியம். சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதற்கு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் திருப்திப்படுத்தும் அரசியலே காரணம். பாகிஸ்தானின் பஞ்சாப் நலனுக்காக இந்த ஒப்பந்தத்தை செய்வதாக கூறினார். பாகிஸ்தான் மீது நேருவுக்கு இருந்த அக்கறை, இந்தியாவின் காஷ்மீர், பஞ்சாப் ராஜஸ்தான், குஜராத் விவசாயிகள் மீது இல்லாமல் போனது. இந்த ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்டின் அடையாளம் என்று நேரு கூறினார். ஆனால், நமக்கு கிடைத்தது பயங்கரவாதமும், வெறுப்பும்தான். நேரு செய்த தவறை திருத்த முடியாது; எதுவும் செய்ய முடியாது என்றுதான் 60 ஆண்டுகளாக நமக்கு சொல்லப்பட்டது. ஆனால், அதை சரிசெய்ய முடியும் என்பதை பிதமர் மோடியின் அரசு காட்டி இருக்கிறது. 370வது சட்டப்பிரிவு திருத்தப்பட்டது. சிந்து நதிநீர் ஒப்பந்தமும் திருத்தப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவை பாகிஸ்தான் முற்றிலும் கைவிடும் வரை சிந்து நிதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக ஓடாது என்று நாங்கள் எச்சரித்து இருக்கிறோம். இந்தியா குறித்த உலகின் பார்வை இப்போது மாறியிருக்கிறது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்பதை புரிந்து கொண்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எந்தவொரு விவகாரம் தொடர்பான பேச்சும் இருதரப்பு ரீதியாக மட்டுமே தீர்க்கப்படும் என்பதை உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்தி உள்ளோம் என்று ஜெய்சங்கர் கூறினார்.