முதல்வரிடம் விளக்கம் கேட்டு அனுராக் தாக்கூர் எம்பி கடிதம் | Karur Incident | Anurag thakur Mp | Dmk
தடுப்பு நடவடிக்கை எடுத்தும் கரூர் சோகம் எப்படி நடந்துச்சு? ஸ்டாலினிடம் எம்பி கேட்ட கேள்விகள் கரூரில் நடந்த துயர சம்பவம் பற்றி விசாரணை நடத்த என்டிஏ கூட்டணி சார்பில் 8 எம்பிக்கள் அடங்கிய குழுவை பாஜ கரூருக்கு அனுப்பியது. அக்குழுவினர் கள ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தும் விவரங்கள் கேட்டறிந்தனர். இச்சூழலில், அந்த குழுவில் இடம் பெற்றிருந்த அனுராக் தாக்கூர் எம்பி, கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், துரதிஷ்டவசமான சம்பவத்தால், கரூர் மக்கள் ஆழ்ந்த வேதனையில் உள்ளனர். இந்த சம்பவத்துக்கு வழிவகுத்த காரணங்கள், சூழ்நிலைகள் பற்றி அவர்கள் முக்கியமான கேள்விகள் எழுப்பி இருக்கிறார்கள் என குறிப்பிட்டு உள்ளார். முதல்வர் ஸ்டாலின், இந்த சூழ்நிலைக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்; இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கான முதன்மை காரணிகள் மற்றும் அந்த நிகழ்வுகளின் தொடர்ச்சி என்ன? சம்பவத்துக்கு முன்பும், சம்பவம் நடந்தபோதும், கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும், நிர்வாகிக்கவும் நிர்வாகம் மற்றும் சட்ட அமலாக்க துறைகள் என்ன ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தன. முதற்கட்ட விசாரணையின்படி, தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதும், இந்த சோகத்துக்கு பங்களித்த குறைபாடுகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் என்ன? இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதை உறுதி செய்தற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி பரிந்துரைத்து பகிர்ந்து கொள்ள வேண்டும். கரூர் சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க ஏதேனும் காலக்கெடு வரையறுக்கப்பட்டு உள்ளதா, அதனை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும். இந்த விஷயத்தில் சரியான நேரத்தில் பதிலை எதிர்பார்க்கிறேன் என்று அனுராக் தாக்கூர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.