கனடாவை சொந்தம் கொண்டாடும் காலிஸ்தானிகள் | Khalistani | Canada | Justin Trudeau
கனடா மக்கள் வெளியேற காலிஸ்தானிகள் மிரட்டல்! அரசின் ஆதரவு ஆபத்தாக மாறியது நம் நாட்டின் பஞ்சாபை தனியாக பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்கோடு செயல்படுபவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள். இந்தியாவில் காலிஸ்தான்கள் ஒடுக்கப்பட்டதால், கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து அதன் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். கனடாவில் இருந்து இதுவரை இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் அடக்கி வாசித்த காலிஸ்தானிகள், வெளிப்படையாகவே செயல்பட தொடங்கினர். அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்துவது; இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் வன்முறை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், ஓட்டு அரசியலுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலிஸ்தானிகளுக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செயல்படுவதாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதால் இருநாட்டு உறவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இச்சூழலில், கனடாவின் சுர்ரே நகரில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நகர சங்கீர்த்தனம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அவர்கள், இது எங்கள் நாடு, இங்குள்ள வெள்ளையர்கள் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லுங்கள் என்று கோஷமிட்டனர்.