காங். ஆட்சியில் இந்துக்கள் மீது பொய் வழக்கு: பிரக்யா சிங் குற்றச்சாட்டு | Malegaon bomb case
மோடி பெயரை சொல்லும்படி என்னை சித்ரவதை செய்தனர் பிரக்யா சிங் பரபரப்பு பேட்டி மாலேகான் வெடிகுண்டு வழக்கில் பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் போன்றவர்களின் பெயர்களை கூறும்படி விசாரணை அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் என அவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பாஜ முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது காங்கிரஸ் கட்சியினர் முஸ்லிம்களை திருப்திப்படுத்தவே அரசியல் செய்கின்றனர். ஆட்சி செய்தபோதும் அவர்கள் அதைத்தான் செய்தனர். இந்துக்களை சிறைப்படுத்தி சித்ரவதை செய்து பொய் வழக்குகள் புனைந்தனர். மாலேகான் வழக்கை விசாரித்த உயர் அதிகாரி பரம்பீர் சிங் பயங்கரமானவர் என நான் மீண்டும் மீண்டும் கூறி வந்தேன். அவர் எல்லா வரம்புகளையும் மீறி செயல்படுவார். சட்டத்துக்கு அப்பாற்பட்டு விசாரணை என்ற பெயரில் என்னை சித்ரவதை செய்தார். அந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள் பலராலும் நான் சித்ரவதை செய்யப்பட்டேன். மாலேகான் வழக்கை விசாரித்தவர்கள் நாட்டில் ஒருவிதமான அச்ச சூழலை உருவாக்கினார்கள். மகாராஷ்டிராவிலும், மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்ததால் மக்களை பயமுறுத்தினர். அனைத்து அரசு நிறுவனங்களையும் தவறாக பயன்படுத்தினர். மாலேகான் வழக்கை விசாரித்த அதிகாரிகளால் பலர் இறந்தனர். அவர்களின் உடல்கள் எங்கே என்பது கூட அவர்களுடைய குடும்பத்தினருக்கு தெரியாது. இந்த வழக்கில் மோகன் பாகவத், ராம் மாதவ், பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத், இந்திரேஷ் குமார் மற்றும் பிற தலைவர்களின் பெயர்களை சொல்ல வேண்டும் என அதிகாரிகள் என்னைக் கட்டாயப்படுத்தினர். அவர்கள் விரும்பியபடி நான் செயல்படவில்லை. அதனால் என்னை சித்ரவதை செய்தனர் என பிரக்யா சிங் தாக்குர் கூறினார்.