பல நாள் நீடித்த மேயர் பிரச்னை ராஜினாமாவில் முடிந்தது | DMK Mayors | Mayor resignation | Mkstalin
முற்றுப்புள்ளி வைத்த தலைமை விடைபெற்ற 2 திமுக மேயர்கள் உட்கட்சி மோதல் பூதாகரமாக வெடித்த சூழலில் திமுகவின் நெல்லை மேயர் சரவணன், கோவை மேயர் கல்பனா அடுத்தடுத்து இன்று ராஜினாமா செய்துள்ளனர். முதலில் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்ட கல்பனா மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கடிதத்தில் கூறியுள்ளார். ஆனால் மாநகராட்சி கமிஷனர்கள், அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுடனும் ஏற்பட்ட மோதலே ராஜினாமாவுக்கு காரணம் என கூறப்படுகிறது. கோவையில் திமுகவை சேர்ந்த முதல் பெண் மேயரான இவர் முழுமையாக பதவி வகிக்காமல் இடையிலேயே விலகி உள்ளார். அடுத்ததாக நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவுக்கு அனுப்பினார். சொந்த காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். சரவணனின் ராஜினாமாவை கமிஷனர் ஏற்று கொண்டார். நெல்லையில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். உட்கட்சி பூசலால் ஆரம்பம் முதலே சரவணன் மீது பல புகார்களை ஆளுங்கட்சியின் கவுன்சிலர்கள் கட்சி தலைமைக்கு அளித்தனர். மேயர் சரவணனுக்கு எதிராக தொடர்ந்து எதிர் குரல் எழுப்பி வந்தனர். உச்சகட்டமாக சரவணன் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர 35க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு, மாநகராட்சி கமிஷனரிடம் வழங்கினர். கடந்த ஜனவரியில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என கமிஷனர் அறிவித்திருந்தார். ஆனால் அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு இணைந்து கவுன்சிலர்களிடம் பேச்சு நடத்தினர். அதை தொடர்ந்து நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீதான ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். சரவணன் பதவி தப்பியது. ஆனால் அதன்பின் நடந்த மாநகராட்சி கூட்டங்களில் தொடர்ந்து சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் மோதல் போக்கு நீடித்தது.