பீகாரில் ₹7,200 கோடி திட்டங்களை துவக்கி வைத்து மோடி பேச்சு
பீகாரின் மோதிஹரியில் நடந்த நிகழ்ச்சியில், அந்த மாநிலத்திற்கு 4 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட 12,000 வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கிராமப்புற மேம்பாட்டிற்காக சுய உதவிக்குழுக்களுக்கு 400 கோடி ரூபாய் நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். இதன் மூலம், 61,500 பேர் பலன் அடைவர். இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 72,000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பின், பிரதமர் மோடி உரையாற்றினார். நாட்டின் வளர்ச்சிக்கு கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி அவசியம். குறிப்பாக பீகார் வளர்ந்தால், நாடு வேகமாக வளரும். பீகார் வளர வேண்டுமென்றால், இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். நிதிஷ் குமார் தலைமையிலான அரசு, பீகார் இளைஞர்கள், பெண்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. 2014ல் மத்தியில் பாஜ ஆட்சி அமைத்த பின், பீகாரின் வளர்ச்சி வேகம் அதிகரித்தது. காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர்கள், நிதிஷ் குமாருக்கு எதிராக பழிவாங்கும் அரசியல் செய்கின்றனர். காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியில், பீகாருக்கு சொற்ப அளவிலான நிதி மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது, அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. NDA ஆட்சியில் பீகாருக்கான நிதி பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகள் வளர்ச்சி அடைந்து வந்தன. தற்போது, ஒட்டுமொத்த கிழக்கு நாடுகளும் வளர்ச்சியை நோக்கி நகர்கின்றன. உலக அளவில் கிழக்கு நாடுகள் வளர்வது போல், நம் நாட்டின் கிழக்கு பகுதியான பீகார் வளர்வது அவசியம். என்டிஏ ஆட்சியில் லட்சாதிபதி பெண்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. கோடிக்கணக்கில், சுய உதவிக்குழுக்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆர்ஜேடி ஆட்சியில் பீகார் மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை தான் இருந்தது. வளர்ச்சிக்கான எந்த முன்னெடுப்போ, அறிகுறியோ அப்போது இல்லை. வேலை வாய்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. மக்கள் தங்கள் வீடுகளுக்கு பெயின்ட் அடிக்க கூட பயந்தனர். வீடு பளிச்சென்று இருந்தால், அந்த வீட்டின் சொந்தக்காரர் கடத்தப்படுவார் என்ற அச்சம் இருந்தது. தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் என்டிஏ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதனால், மாநிலம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்த வளர்ச்சி மேலும் விரிவடைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என பிரதமர் மோடி பேசினார்.