அண்டை நாடுகளில் புரட்சி கலவரத்தால் மாற்றம் வராது | Mohan Bhagwat | RSS | Nagpur
கலவரத்தை தூண்டும் சக்திகளிடம் இளைஞர்களே விழிப்புடன் இருங்கள் மோகன் பகவத் பரபரப்பு பேச்சு நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் இன்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மோகன் பகவத் பேசியதாவது பஹல்காம் தாக்குதலின்போது எல்லை கடந்து வந்த பயங்கரவாதிகள் இந்தியர்களின் மதத்தை கேட்டு கொன்றனர். மக்கள் கோபத்தில் கொந்தளித்தனர். நமது அரசும், ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. எதிரிகளுக்கு நாம் கொடுத்த பதிலடியில் அரசின் அர்ப்பணிப்பு, ராணுவத்தின் வீரம், மக்களின் ஒற்றுமையை காண முடிந்தது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தின்போது, இந்தியாவின் நண்பர்கள் யார், எந்த அளவு அவர்கள் நமக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதும் புரிந்தது. இப்போது, நாட்டில் நக்சல் இயக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்னை மீண்டும் வராமல் இருக்க இன்னும் நிறைய செய்ய வேண்டும். நக்சல்களுக்கு எப்படி வலுப்பெற்றார்கள்? ஏனென்றால், ஏழை மக்கள் சுரண்டப்பட்டார்கள், அந்தப் பகுதிகளில் வளர்ச்சி இல்லை, அரசு நிர்வாகமும் மக்களின் தேவைகளை புரிந்துகொள்ளவில்லை. இப்போது இந்தக் குறைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. இனி, அந்த பகுதிகளில் நியாயமான வளர்ச்சி, மக்களிடையே ஒற்றுமை, அன்பு, இணக்கம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் விரைவாக செய்ய வேண்டும். அமெரிக்கா அறிவித்த புதிய வரிகள் அமெரிக்கர்களின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்டவை. ஆனால் அது அனைவரையும் பாதிக்கிறது. நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்துதான் இயங்க வேண்டி இருக்கின்றன. இந்த சார்பு தன்மையானது கட்டாயம் என்ற நிலைக்கு மாறக்கூடாது. அதற்கு நாம் சுயசார்புடன் வாழ சுதேசி கொள்கையை பின்பற்றியாக வேண்டும். நமது நாட்டில் இயற்கை பேரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த 3, 4 ஆண்டாக நிலச்சரிவுகளும் தொடர் மழையும் வழக்கமான நிகழ்வுகளாகி விட்டன. இமயமலை, நமது பாதுகாப்பு அரணாகவும் தெற்காசியாவின் நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இமயமலையில் வளர்ச்சி என்ற பெயரில் கட்டடங்களை கட்டுவது, பேரழிவுக்கு காரணமாக இருந்தால், அரசு தன் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வரலாற்றில் நடந்த அனைத்து அரசியல் புரட்சிகளையும் பாருங்கள். இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் மக்களின் கோபம் கலவரமாக மாறி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், அங்கு நடந்த புரட்சிகளால் ஏதாவது நல்லதொரு மாற்றங்கள் நடந்ததா? எதுவும் நடக்கவில்லை. ஜனநாயக வழிமுறைகளால் மட்டும்தான் நிலையான மாற்றங்களை கொண்டு வர முடியும். நமது பக்கத்து நாடுகளில் அமைதியற்ற சூழல் இருப்பது நல்ல விஷயம் இல்லை. இந்தியாவிலும் இது போன்ற குழப்பங்களை உருவாக்க விரும்பும் சக்திகள், நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளன. அப்படிப்பட்ட சக்திகளிடம் நம் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வெளிநாட்டு சித்தாந்தங்கள் நம் நாட்டுக்குள் வந்த போதெல்லாம் அவற்றை ஏற்றுக்கொண்டு நம்முடையது என கருதினோம். உலத்தில் உள்ள பன்முகத் தன்மைகளை எல்லாம் நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நமது நாட்டில் உள்ள பன்முகத் தன்மையை நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளாக சித்தரித்து பிரிவினையை உருவாக்க முயல்கிறார்கள். பலதரப்பட்ட நம்பிக்கைகள் உள்ளவர்கள் ஒன்றாக வாழம்போது அவ்வப்போது சில குழப்பங்களும், பிரச்னைகளும் ஏற்படலாம். அதற்காக நல்லிணக்கம் கெடும் வகையில் யாரும் செயல்படகூடாது. அப்படிப்பட்ட சக்திகளை அரசு உடனுக்குடன் களையெடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தூண்டிவிட முயற்சிப்பது, பலத்தை காட்டுவது என்பன போன்ற விஷயங்களை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்றே பார்க்க வேண்டும். பன்முகத் தன்மையை முழுமையாக ஏற்பதும் மதிப்பதும் நமது கலாசாரம். அதுதான் தேசியம். அதைத்தான் நாம் இந்து தேசியம் என்று அழைக்கிறோம். கலாசாரம்தான் நம்முடைய தேசத்தை உருவாக்குகிறது. அதில் மாநிலங்கள் வந்து போகலாம். கலாசாரத்தால் தேசம் எப்போதும் நிலைத்திருக்கும். அப்படிப்பட்டது தான் இந்து ராஷ்டிரம். நாம் அனைத்து வகையான எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் பார்த்திருக்கிறோம். அடிமை வாழ்விலும் இருந்துள்ளோம். விடுதலையையும் பார்த்திருக்கிறோம். அதனால்தான் இந்து சமூகம் தேச பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இந்து சமூகம் பொறுப்பான சமுதாயம். அது நீயா நானா என்ற மன நிலையில் இருந்து எப்போதும் விலகியே இருக்கிறது என மோகன் பகவத் கூறினார்.