இலங்கையின் புதிய பிரதமரை நியமித்தார் அதிபர் அனுர குமார திசநாயகே | Sri Lanka PM | PM Harini
இலங்கை பிரதமரானார் ஹரிணி 3வது முறை பெண்ணுக்கு வாய்ப்பு யார் இந்த ஹரிணி அமரசூரியா? இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த அனுர குமார திசநாயகே வெற்றி பெற்று புதிய அதிபரானார். கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர இருப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். அதிபர் தேர்தலில் அனுர வெற்றியை தொடர்ந்து, முன்னாள் அதிபர் ரணில் தலைமையிலான ஆட்சியில் பிரதமராக இருந்த திணேஷ் குணவர்த்தனே ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக கல்வியாளரும், பெண்ணியவாதியுமான ஹரிணி அமரசூரியாவை நியமித்துள்ளார் அதிபர் அனுர. இலங்கை பார்லிமென்டில் என்பிபி சார்பில் நியமன எம்பியாக உள்ள ஹரிணி, சமூக கல்வித்துறை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கே, சந்திரிகா பண்டாரநாயகே குமாரதுங்காவை தொடர்ந்து, நாட்டின் 3வது பெண் பிரதமராக ஹரிணி அமரசூரியா பொறுப்பேற்றுள்ளார். இலங்கை அரசியல் வரலாற்றில் 1994க்கு பின் பெண் ஒருவர் பிரதமராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை. விஜிதா ஹெராத், லக்ஷ்மண் நிபுணராச்சி ஆகியோர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அதிபர் தேர்தல் முடிவுகளுக்குப் பின், திணேஷ் குணவர்த்தனே தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் ஹரிணி தலைமையிலான இடைக்கால அரசு அடுத்த நிலையான ஆட்சி அமையும் வரை நாட்டின் நிர்வாகப் பொறுப்புகளை கவனிக்கும்.