அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்கட்சிகளுக்கு கோரிக்கை
அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்கட்சிகளுக்கு கோரிக்கை பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. நாளை மறுநாள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க, அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. இக்கூட்டம், பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒருங்கிணைப்பில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டில்லியில் நடந்தது. 44 கட்சிகளை சேர்ந்த 55 எம்பிக்கள் பங்கேற்றனர். காங்கிரஸில் கே.சுரேஷ், திமுகவின் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆம் ஆத்மி சஞ்சய் சிங், அகாலிதளம் ஹர்சிம்ரத் கவுர், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, லோக்ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான், மத்திய அமைச்சர்கள் நட்டா, முருகன், அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். பார்லிமென்ட் கூட்டத்தொடரை சுமுகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்த அனைத்து கட்சி எம்பிக்களும் ஒத்துழைக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார். பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என, ஜேடியு எம்பிக்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்களும் வலியுறுத்தினர். கூட்டத்திற்கு பின் பேசிய கிரண் ரிஜிஜு, பார்லிமென்ட் நடவடிக்கை குறித்து அனைவரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். எம்பிக்களின் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பார்லிமென்ட் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். இது குறித்து அனைத்து கட்சிகளிடமும் வலியுறுத்தப்பட்டது என்றார்.