ஹரியானாவில் காங் தோற்க முக்கிய காரணமே இதுதான் | Haryana Elecition | BJP vs Congress | Jat caste
ஹரியானாவில் காங் தோற்க முக்கிய காரணமே இதுதான் | Haryana Elecition | BJP vs Congress | Jat caste ஹரியானாவில் இந்த முறை காங்கிரஸ் தான் வெல்லும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறின. மொத்தமுள்ள 90 இடங்களில் வெற்றிக்கு தேவை 46 சீட். ஆனால் காங்கிரஸ் 50 முதல் 60 சீட்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று பல கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறி இருந்தன. இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கை ரிசல்ட் எல்லா கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி விட்டது. பாஜ இமாலய வெற்றியை ருசித்து இருக்கிறது. தொடர்ந்து 3வது முறையாக பாஜ ஆட்சி அமைக்க போகிறது. காங்கிரசுக்கு இவ்வளவு பெரிய அடி விழுவதற்கு முக்கிய காரணம், அந்த கட்சி செய்த ஜாதி அரசியல் தான் என்கிறது கள நிலவரம். அதாவது காங்கிரஸ் ஜாட் ஜாதியினரை தான் மலை போல் நம்பி இருந்தது. இந்த ஜாதி தான் ஹரியானாவில் பெரும்பான்மை சமூகம். மொத்த மக்களில் 26 முதல் 28 சதவீதம் பேர் ஜாட் ஜாதியை சேர்ந்தவர்கள். அரசியல் பலமும் இந்த ஜாதிக்கு அதிகம். 1996ல் தான் ஹரியானா தனி மாநிலம் ஆனது. அதற்கு பிறகு அமைந்த ஆட்சியில் ஜாட் சமூகத்தை சேர்ந்த முதல்வர்கள் தான் 33 வருடம் அம்மாநிலத்தை ஆட்சி செய்து இருக்கின்றனர். அந்த அளவுக்கு ஜாட் சமூகத்துக்கு அரசியல் வலிமை அதிகம். எனவே தான் அந்த ஜாதி மக்களை வளைத்தால் போதும் ஆட்சியை பிடித்து விடலாம் என்று காங்கிரஸ் கணக்கு போட்டது. தலித் மற்றும் இதர ஜாதியினரை காங்கிரஸ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஜாட் சமூகத்தை சேர்ந்த மாஜி முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு முழு அதிகாரம் கொடுத்தது. அவரது எல்லா முடிவுகளுக்கும் டபுள் ஓகே சொன்னது. அதே நேரம் தலித் சமூகத்தை சேர்ந்த செல்வாக்கான தலைவர் குமாரி செல்ஜாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. சொந்த கட்சிக்குள்ளேயே பூபிந்தரும், குமாரி செல்ஜாவும் எலியும் பூனையுமாக இருந்தனர். வீட்டுக்கு வீடு காங்கிரஸ் என்று பூபிந்தர் பிரசாரத்தை முன்னெடுத்தார். ஆனால் செல்ஜாவோ வேறு ஒரு யாத்திரையை நடத்தினார். இந்த பிளவை பாஜ கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டது. அதே போல், காங்கிரஸ் ஜாட் சமூகத்தினருக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில், ஜாட் அல்லாத மற்ற சமூகத்தினரை பாஜ குறி வைத்தது. காங்கிரசில், பூபிந்தர் தான் சார்ந்த ஜாட் சமூகத்தினர் 26 பேருக்கு சீட் வாங்கி கொடுத்தார். மொத்த காங்கிரஸ் வேட்பாளர்களில் அவரது ஆதரவாளர்கள் மட்டும் 70 பேர். ஆனால் தலித் சமூகத்தை சேர்ந்த குமாரி செல்ஜாவால் தனது ஆதரவாளர்கள் 9 பேருக்கு மட்டுமே டிக்கெட் வாங்கி கொடுக்க முடிந்தது. விரக்தியில் இருந்த அவர் பிரசாரத்தில் பெரிதாக பங்கேற்கவில்லை. தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவை கூட புறக்கணித்தார். காங்கிரஸ் நடவடிக்கையால் தலித் உட்பட ஜாட் அல்லாத சமூகத்தினர் அதிருப்தியில் பாஜ பக்கம் சாய்ந்தனர். பாஜ இந்த முறையும் ஜாட் அல்லாத ஓபிசி மற்றும் பிராமண வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. இதற்கு கை மேல் பலன் கிடைத்தது. காங்கிரஸ் எதிர்பார்த்தது போலவே ஜாட் சமூக மக்கள் அந்த கட்சிக்கு திரளாக ஓட்டுப்போட்டனர். அதே நேரம் இதர ஓபிசி சமூகத்தினர், பிராமணர்கள் ஓட்டு பாஜவுக்கு விழுந்தது. பகுஜன் சமாஜ் கட்சி தலைமையில் சிறு சிறு தலித் கட்சிகள் கூட்டணி வைத்து இருந்தன. இதனால் தலித் ஓட்டு சிதறியது. இதுவும் பாஜவுக்கு தான் கை கொடுத்தது. அதே போல் பாஜ கிராமங்களில் தீவிர கவனம் செலுத்தியது. இதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு கடுமையாக உழைத்தது. செப்டம்பர் துவக்கத்தில் இருந்தே கிராமம் கிராமமாக தன்னார்வலர்களை அனுப்பி பாஜவுக்காக கடுமையாக பிரசாரம் செய்தது. இந்த பலனையும் பாஜ அறுவடை செய்தது. இன்னும் ஜாட் சமூக மக்களை மட்டும் நம்பி காங்கிரஸ் அரசியல் செய்தால் அந்த கட்சியால் மீண்டும் ஹரியானாவில் ஆட்சியை பிடிப்பது கடினம் என்கின்றனர் அம்மாநில அரசியல் நிபுணர்கள்.