விதி மீறல் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க காங். பாஜவுக்கு நோட்டீஸ் | EC notice | BJP | Congress |
விதி மீறல் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க காங். பாஜவுக்கு நோட்டீஸ் | EC notice | BJP | Congress | Poll code violation | Kharge | Nadda 81 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் முதற்கட்டமாக 43 தொகுதிகளில் கடந்த 13ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி 2ம் கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதே நாளில் 288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த 2 மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரத்தின்போது நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ், பாஜ என இரு தரப்பும் பரஸ்பரம் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளன. பாஜ அளித்த புகாரில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் சாசனம் குறித்து பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு, மாநிலங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துவதாக கூறி இருந்தது. இந்த புகாரை பாஜ பிரதிநிதிகள் தலைமைத் தேர்தல் கமிஷனரை சந்தித்து அளித்ததாக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்திருந்தார். இதேபோல் காங்கிரஸ் தரப்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது என 2 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இருவரும் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் மக்களிடையே பிளவுபடுத்தும், பொய்யான, தீங்கு விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டி உள்ளனர். பாஜ தலைவர்களின் வெட்கக்கேடான தேர்தல் விதிமீறல் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் கமிஷனிடம் கேட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறி இருந்தார். இந்நிலையில் இரு தரப்பிடமும் விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், ஜார்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டார் பேச்சாளர்கள் தேர்தல் விதிகளை மீறியதாக நவம்பர் 11ல் பாஜ அளித்த புகாரை குறிப்பிட்டுள்ளது. இதே குற்றச்சாட்டுகளை முன் வைத்து பாஜ மீது காங்கிரஸ் அளித்த 2 புகார்களை பாஜ தேசிய தலைவர் நட்டாவுக்கு அனுப்பிய கடிதத்தில் தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ளது. விதி மீறல் புகார் தொடர்பாக வரும் 18 திங்கட்கிழமை மதியம் 1 மணிக்குள் பதில் அளிக்க இரு கட்சி தலைவர்களையும் தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.