பீகார் சட்டசபையில் நிதிஷ்குமார், தேஜஸ்வி காரசார விவாதம் | Nitish Kumar | Tejaswi | Bihar Assembly |
உங்க அப்பா லாலு பிரசாத்தை வளர்த்துவிட்டதே நாங்கதான்! தேஜஸ்வியை திணறடித்த முதல்வர் நிதிஷ்குமார் பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு சட்டசபை கூட்ட தொடர்ந்து நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வர் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து பேசினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் நிதிஷ்குமார், பீகாரில் தங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை அடுக்கினார். அப்போது குறுக்கிட்ட தேஜஸ்வி பீகாரின் வளர்ச்சிக்கு என் தந்தை லாலுவே காரணம். அவரது ஆட்சியில் தான் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார். தேஜஸ்வியின் பேச்சால் நிதிஷ் குமார் சூடானார். பீகாரில் இதற்கு முன் என்ன இருந்தது? ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பற்றி லாலுவுக்கு அக்கறை இருந்ததில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவையே நீக்கிவிட்டு, அவர்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கூறியவர் லாலு. நாங்கள் அதை கடுமையாக எதிர்த்தோம். லாலுவை அவரது சமூகத்தினரே எதிர்த்தனர். லாலுவை ஏன் வளர்த்து விடுகிறீர்கள் என என்னிடம் உங்கள் சமூகத்தினர் பலமுறை கேள்வி எழுப்பினர். ஆனாலும், அவரை நாங்கள் கைவிடவில்லை. உங்கள் தந்தையை வளர்த்துவிட்டதே நாங்கள்தான் தான். அந்தக் காலத்தை பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது. பீகாரில் எங்கள் ஆட்சி அமைந்த பின் தான், வளர்ச்சி என்பதே சாத்தியப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் வெறும் 6 அரசு மெடிக்கல் காலேஜ்கள் மட்டுமே இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளது. அதை 14 ஆக உயர்த்துவோம் என நிதிஷ் பேசினார். முதல்வர் நிதிஷ் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் தேஜஸ்வி இடையிலான காரசார விவாதத்தால் பீகார் சட்டசபையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மாறி மாறி கோஷமிட்டனர். இதனால், சட்டசபையில் சலசலப்பு நிலவியது.