பார்லிமென்ட் தேர்தல் தேதியும் வெளியானதால் இலங்கையில் பரபரப்பு | Parliament election announced |
பார்லிமென்ட்டை கலைத்தார் இலங்கை அதிபர் அனுர! அடுத்தடுத்து அதிரடி இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த அனுர குமார திசநாயகே வெற்றி பெற்று புதிய அதிபரானார். அனுர வெற்றியை தொடர்ந்து, முன்னாள் அதிபர் ரணில் தலைமையிலான ஆட்சியில் பிரதமராக இருந்த திணேஷ் குணவர்த்தனே ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக கல்வியாளரும், பெண்ணியவாதியுமான ஹரிணி அமரசூரியாவை அதிபர் அனுர நேற்று நியமித்தார் விஜிதா ஹெராத், லக்ஷ்மண் நிபுணராச்சி ஆகியோர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அதிபர் தேர்தல் முடிவுகளுக்குப் பின், திணேஷ் குணவர்த்தனே தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் ஹரிணி தலைமையிலான இடைக்கால அரசு அடுத்த நிலையான ஆட்சி அமையும் வரை நாட்டின் நிர்வாக பொறுப்புகளை கவனிக்கும். அந்நாட்டு விதிகளின் படி இன்னும் 4 முதல் 7 வாரங்களுக்குள் பார்லிமென்ட் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இலங்கை பார்லிமென்ட்டை கலைத்துவிட்டு, தேர்தல் மூலம் ஆட்சி அமைக்க விரும்புவதாக கூறிய அதிபர் அநுர குமார திசநாயக, பார்லிமென்ட்டை கலைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். நவம்பர் 14ல் இலங்கை பார்லிமென்ட் தேர்தல் நடைபெறும் என முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 11 மாத காலம் பார்லிமென்ட் பதவிக்காலம் இருந்தாலும், முன்கூட்டியே பார்லிமென்ட் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற உள்ளது.