புடின் ஜின்பிங்குடன் சிரித்து பேசிய மோடி | modi meets Putin xi jinping | SCO summit china
ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி சந்திப்பு அமெரிக்க வரி பற்றி முக்கிய ஆலோசனை அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். பிறகு, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அபராதமாக கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்தார், டிரம்ப். சீனா மீதும் 50 சதவீதத்துக்கு அதிகமாக டிரம்ப் வரி விதித்துள்ளார். இந்தச் சூழலில், சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று துவங்கியது. இந்த அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. முதல் நாள் மாநாட்டின் இடையே பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். சந்திப்பின்போது, அமெரிக்காவின் தன்னிச்சையான வரி விதிப்பு குறித்து விவாதித்தனர். அதன்பிறகு, மோடி கூறுகையில், இந்தியா சீனா இடையிலான உறவு மனித குலத்துக்கு நன்மை பயக்கும் என்றார். ஜின்பிங் கூறுகையில், இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்படுவதே இரு நாடுகளின் வளர்ச்சிக்கு நல்லது என கூறினார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் இன்று ஷாங்காய் மாநாட்டின் 2வது நாள் நிகழ்வுகள் நடந்தன. அப்போது, ரஷ்ய அதிபர் புடினும் பிரதமர் மோடியும் சந்தித்து பேசினர். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 சதவீதம் அபராத வரி குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்தியா மீது அபராத வரி விதித்த அமெரிக்காவுக்கு ரஷ்யா ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், புடின் மோடி சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிபர் புடினுடன் நடந்த சந்திப்பு குறித்த போட்டோவை பிரதமர் மோடி வலைதளத்தில் பதிவிட்டார். ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது என அதில் பிரதமர் மோடி கூறியுள்ளார். இன்றைய மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் உரையாடினர். பரஸ்பரம் நலம் விசாரித்து சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். அந்த போட்டோவையும் பிரதமர் மோடி வலைதளத்தில் பதிவிட்டார். தியான்ஜினில் உரையாடல்கள் தொடர்கின்றன! ஷாங்காய் உச்சிமாநாட்டின் போது ரஷ்ய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங்குடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தருணம் என மோடி அந்த பதிவில் கூறியுள்ளார்.