பொன்முடியை விட்டு வைத்தது ஏன்?: ஐகோர்ட் கேள்வி | pon mudi| high court
ஹிந்து மதத்தையும், பெண்களையும் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. பொன்முடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பொன்முடிபேச்சை கண்டித்த கோர்ட், அவர் மீது வழக்கு பதிவு செய்ய ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இன்று வழக்கு மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் பொன்முடியின் பேச்சு இந்து மதத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது. அது வெறுப்பு பேச்சு குற்றச்சாட்டின் கீழ் வருகிறது என நீதிபதி கூறினார். தமிழகத்தில் சைவ, வைணவ மதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. விபூதி பட்டையும், நாமமும் புனிதமானவை. அவற்றை விலைமாது செயலுடன் ஒப்பிட்டு பேசியதை ஏற்க முடியாது. மத ரீதியாக புண்படுத்தும் பேச்சை சகித்து கொள்ள முடியாது என நீதிபதி கூறினார். பொன்முடி தரப்பு வழக்கீல் வாதிடும்போது, அமைச்சர் பேச்சின் ஒரு பகுதி மட்டுமே பரப்பப்படுவதாகவும், அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டு விட்டதாக கூறினார். ஆனால், இதை நீதிபதி ஏற்கவில்லை. மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றார். பொன்முடி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். பேசியதை பொன்முடி ஒப்புக்கொண்டுள்ளார். கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவர் மீது புகார்கள் பெறப்பட்டதாக தமிழக அரசு கூறியது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது. போலீசார் நடவடிக்கை எடுக்காதது துரதிஷ்டவசமானது. அமைச்சராக இருக்கிறார் என்பதால் காவல்துறை அவருக்கு சலுகை வழங்க முடியாது என நீதிபதி கூறினார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்ய பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.