தேமுதிக பேரம்: முதல்வர் குடும்பத்தில் இருந்து சென்ற முக்கிய நபர் | Premalatha Alliance Deal
2026 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., எந்த கூட்டணியில் இணையும் என்ற முடிவை அக்கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. ஆரம்பத்தில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைய, தே.மு.தி.க., தரப்பில் பேச்சு நடந்தது. பா.ஜ., தலைமையும் தே.மு.தி.க.,வை கூட்டணியில் இணைக்க முயற்சித்தது. ஆனால், 10 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட், மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான அ.தி.மு.க., - பா.ஜ., தலைமை, தே.மு.தி.க.,வை ஓரம் கட்டியது. இதையடுத்து, தி.மு.க., கூட்டணியில் சேர, தே.மு.தி.க., பேச்சு நடத்துகிறது. ஆறு தொகுதிகள் வரை தருவதாக, தி.மு.க., தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், எட்டு தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட், தேர்தல் செலவுக்கு நிதி என, தே.மு.தி.க., தரப்பில் கேட்கப்பட்டது. இந்த நிலையில், தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரேமலதா, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார். அங்கிருந்து திருவனந்தபுரம் சென்று, அங்குள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அப்போது, முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரேமலதாவை சந்தித்து பேசி உள்ளனர்.