நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்க கோரி வீதியில் இறங்கிய மக்கள்! Pro-monarchy Protest | Nepal | King
இமயமலைத் தொடரில் அமைந்துள்ள குட்டி நாடு நேபாளம். நிலப்பரப்பில் சிறியதாக இருந்தாலும், இந்தியா - சீனாவுக்கு இடையே இமயமலைத் தொடரில் இருப்பதால் சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ள நாடாக கருதப்படுகிறது. 1769 முதல் 2008ம் ஆண்டு வரை அங்கு மன்னராட்சி அமலில் இருந்தது. பிருத்வி நாராயண் ஷா நேபாள நாட்டின் முதல் மன்னராவார். அவரை தொடர்ந்து, பிரதாப் சிங் ஷா, ராணா பகதுார் ஷா என அடுத்தடுத்த மன்னர்கள் நேபாளத்தை ஆட்சி செய்தனர். 1990களில் மன்னர் ஆட்சியில் இருந்து ஜனநாயக ஆட்சி நோக்கிய பயணத்தை நேபாளம் சந்திக்க துவங்கியது. அப்போதைய மன்னர் மகேந்திராவின் ஆட்சி காலத்திலேயே இதற்கான முன்னெடுப்புகள் நடந்தன. 2006ல் அப்போதைய மன்னர் ஞானேந்திராவின் ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் நேபாளத்தின் கடைசி மன்னர் என்ற பெருமையுடன் 2008ல் ஆட்சிக்கு விடை கொடுத்தார். அப்போதே நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்து மக்களாட்சி மலர்ந்தது. அங்குள்ள ஜனக்புரியில் தான் ராமனின் மனைவி சீதை பிறந்ததாக ஐதீகம். முக்திநாத், பசுபதிநாத் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற ஹிந்து கோயில்கள் அங்குள்ளன. ஒரு காலத்தில் ஹிந்து நாடாகவே பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது. மக்களாட்சி முறை அமலான பின், மதச்சார்பற்ற நாடாக அறிவித்துக் கொண்டது நேபாளம். 2008ல் நடந்த தேர்தலில் ஒருங்கிணைந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று புஷ்ப கமல் தகால் பிரதமரானார். அவரது தலைமையிலான ஆட்சி ஓராண்டு கூட நிலைக்கவில்லை. அதன் பின், நேபாள கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்த மாதவ் குமார் பிரதமரானார். அவரும் ஓராண்டு கூட நீடிக்கவில்லை. தொடர்ந்து ஜஹல் நாத், பாபுராம், கில்ராஜ், சுஷில் கொய்ராலா, கே.பி.சர்மா ஒலி என அடுத்தடுத்த பிரதமர்கள் மாறி கொண்டே இருந்தனர். தற்போது கே.பி.சர்மா ஒலி பிரதமராக உள்ளார். அந்த வகையில், மக்களாட்சி மலர்ந்த பின் 17 ஆண்டுகளில் 13 பிரதமர்கள் மாறி உள்ளனர். நேபாளத்தில் ராம் பரன் யாதவ், பித்யா தேவி பண்டாரி ஆகியோர் அதிபர்களாக பதவி வகித்தனர். 2023 முதல் ராம் சந்திர பவுதேல் நேபாளத்தின் அதிபராக பதவி வகிக்கிறார். மக்களாட்சி மலர்ந்தாலும், நிலையற்ற அரசுகள், ஊழல், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, மக்கள் வாழ்வாதார முன்னேற்றம் இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால், அங்கு புரட்சி வெடித்துள்ளது. மக்களாட்சியை எதிர்க்கும் ஒரு தரப்பினர் வீதிகளில் இறங்கி போராட துவங்கி உள்ளனர். பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையில், நேர்மையற்ற, ஊழல் மலிந்த ஆட்சி நடப்பதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் மீண்டும் மன்னராட்சியை கொண்டு வர வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். அதே நேரத்தில் நேபாளத்தை மீண்டும் ஹிந்து தேசமாக அறிவிக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டதால், தங்கள் கலாசாரம், பாரம்பரியம் மெல்ல சிதைந்து நேபாள மக்கள் தங்கள் அடையாளத்தை இழந்து வருவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபடுவதால், தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது. இவை அனைத்தும் முன்னாள் மன்னர் ஞானேந்திராவின் ஆதரவாளர்களின் சதிச் செயல் என பிரதமர் ஒலி குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு, ஞானேந்திரா தன் ஆதரவாளர்கள் மூலம் மக்களை துாண்டி கிளர்ச்சி செய்கிறார் என சர்மா ஒலி பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 240 ஆண்டு காலம் மன்னராட்சி நடந்த நேபாளத்தில் மக்களாட்சி மலர்ந்து வெறும் 17 ஆண்டுகளுக்குள் மீண்டும் மன்னராட்சி கோரி போராட்டம் வெடித்துள்ளது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா - சீனா இரு நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள நேபாளம், சர்வதேச பூகோள அரசியலிலும் முக்கிய பங்காற்றுவதால், இந்த பிரச்னை அனைத்து நாடுகளாலும் உற்று நோக்கப்படுகிறது.