உக்ரைனில் புடின் செய்த படுபாதக செயல்-பகீர் தகவல் US-Russia talk in saudi | Putin Russia drone attack
கொத்து கொத்தா ட்ரோனை விட்டு உக்ரைனை வேட்டையாடிய புடின்! தூது குழுவை பேச்சுக்கு அனுப்பிவிட்டு பயங்கரம் மூன்று ஆண்டுகளாக நடக்கும் உக்ரைன்-ரஷ்யா போரில் ஆயிரக்கணக்கான மக்கள், வீரர்கள் மரணம் அடைந்து உள்ளனர். உக்ரைன், ரஷ்யா இரு தரப்பிலும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் 11 சதவீத பகுதியை ரஷ்யாவும், ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தின் ஒரு பகுதியை உக்ரைனும் பிடித்து இருக்கின்றன. இந்த நிலையில் தான் அமெரிக்க அதிபரானதும் போரை நிறுத்த டிரம்ப் முயற்சி எடுத்தார். இதற்காக புடினிடம் போனில் பேசினார். அதில் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டபடி, சவுதி அரேபியால் அமெரிக்கா, ரஷ்யா இடையே இன்று பேச்சு வார்த்தை நடந்தது. சவுதி அரசு முன்னிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், புடினின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தனர். இந்த பேச்சு வார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதே நேரம் உக்ரைன் அதிபர் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் உள்ளார். நாளை அவர் சவுதி செல்கிறார். பேச்சு வார்த்தை குறித்து சவுதி அரசாங்கம் அவருக்கு விளக்கி சொல்லும். அப்போது உக்ரைன் தரப்பில் முக்கிய கோரிக்கைகளை ஜெலன்ஸ்கி முன் வைக்க உள்ளார். ஒரு பக்கம் இப்படி போர் நிறுத்த பேச்சு வார்த்தை பரபரப்பாக போய் கொண்டிருக்கும் நேரத்தில், உக்ரைனில் புகுந்து ரஷ்யா கோர தாண்டவமாடியது. ஒரே நேரத்தில் ரஷ்யாவின் 179 ட்ரோன்கள் மத்திய உக்ரைனுக்குள் படையெடுத்தன. சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. இதில் ஏராளமான குடியிருப்புகள் தகர்க்கப்பட்டன. குறிப்பாக 38 பெரிய பெரிய அப்பார்ட்மென்ட்கள் குண்டு வீச்சில் சேதம் அடைந்தன. அங்கு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உக்ரைன் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிர் சேதம் பற்றி விவரம் உடனடியாக வெளியாகவில்லை. சவுதிக்கு பேச்சு வார்த்தைக்கான தூதுவர்களை அனுப்பிய அதே நேரத்தில் உக்ரைனுக்குள் ட்ரோன்களையும் சாரை சாரையாக அனுப்பி இருந்தார் புடின். இதை உக்ரைன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பேச்சு வார்த்தைக்கு வந்து விட்டு இப்படி கொடூரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என்று உக்ரைன் அரசு கேள்வி எழுப்பி உள்ளது.