பீஹார் தேர்தலால் காங்கிரஸ் அதோகதி: தமிழக தலைவர்கள் குமுறல் bihar election| congress defeat| reasons
பீஹார் தேர்தலில், காங்கிரசின் படுதோல்வி, தொண்டர்கள், தலைவர்கள் இடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சியின் மோசமான செயல்பாடுகளே, தோல்விக்கு முக்கிய காரணம் என, பலரும் தேசிய தலைமைக்கு எடுத்துக் கூறி வருகின்றனர். தோல்வி எதிர்பார்த்தது தான் என்றாலும், மோசமான தோல்வியை சந்தித்தது, கட்சியின் எதிர்காலத்துக்கே விடப்பட்ட சவாலாக கருதுகிறோம் என பிரசாரத்துக்காக பீஹாருக்கு சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். இனியும், கள நிலவரம் புரியாமல், தலைமை செயல்பட்டால், காங்கிரசை யாராலும் காப்பாற்ற முடியாது என, கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளனர். அவற்றில், முக்கியமானவை குறித்து, தமிழக காங்கிரஸார் பகிர்ந்து கொண்டனர். பூத் முகவர்களைக் கூட முழுமையாக போட முடியாத அந்தளவுக்கு தொண்டர்கள் இல்லாத கட்சியாக பீஹாரில் காங்கிரஸ் மாறி உள்ளது. 1990களில் இருந்தே, பீஹாரில் காங்கிரஸ் முகம் என சொல்லும் அளவுக்கு எந்த தலைவரையும் காங்கிரஸ் உருவாக்கவில்லை. பணம் வாங்கிக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்தது, சொற்ப எண்ணிக்கையில் இருந்த கட்சியினரையும் சோர்வாக்கியது. தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வேட்பாளர் ஆக்கியதால், உள்ளூர் காங்கிரசார் ஒதுங்கி கொண்டனர். சிலர், எதிர் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டனர்.