நிகழ்ச்சிக்கு 2 மணி நேரம் முன் மக்கள் கூட அனுமதி இல்லை! | political Meeting | Party rallies
கரூர் சம்பவத்தை தொடர்ந்து கட்சி தலைவர்களின் ரோடு ஷோ, பிரசார கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. முதல்வர் ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக கருத்து கேட்பதற்கான அனைத்து கட்சி கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியன், ரகுபதி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அரசு தரப்பில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள்: அரசியல் கட்சி கூட்டங்களுக்கு டெபாசிட் தொகை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 5000 முதல் 10,000 பேர் வரை கூடும் கூட்டங்களுக்கு 1 லட்சம், 50,000 பேருக்கு மேல் கூடும் கூட்டங்களுக்கு 20 லட்சம் டெபாசிட் தொகையாக நிர்ணயிக்க திட்டம். ரோடு ஷோ நடத்தும் அரசியல் கட்சிகளிடமிருந்து 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை கூடினால் வைப்புத்தொகை 3 லட்சம், 20ல் இருந்து 50 ஆயிரம் பேர் வரை கூடினால் 8 லட்சம், 50 ஆயிரத்துக்கு மேல் கூடினால் 20 லட்சம் தொகையும் கட்ட பரிந்துரை. நிகழ்ச்சிக்கு முன்னதாக 2 மணி நேரம் முன்னர் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். ரோடு ஷோ பொதுக்கூட்டங்கள் 3 மணி நேரத்திற்கு உள்ளதாக முடிக்க வேண்டும். அனைவரும் அமைதியாக கலைந்து செல்வதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும். 3 மணி நேரத்துக்கு மேல் அவகாசம் தேவைப்பட்டால் போலீஸ் அதிகாரி முடிவெடுப்பார். குறிப்பிட்டதை விட 50 சதவீதம் மேல் எண்ணிக்கை கூடினால் வைப்புத்தொகை திரும்பத் தர மாட்டாது என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இது போன்ற நிபந்தனைகளுடன் பிரசார கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து ஐகோர்ட்டில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.