நிலம் மோசடி கேஸில் சிக்கிய மச்சானுக்கு ராகுல் சப்போர்ட்! | Robert Vadra | Rahul Gandhi | ED
10 ஆண்டுகளாக வத்ரா வேட்டையாடப்படுகிறார்! மத்திய அரசு மீது பாய்ந்த ராகுல் நிலம் மோசடி வழக்கில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அத்துடன் அவரது 37.64 கோடி ரூபாய் மதிப்புள்ள 43 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை தன்வசப்படுத்தி உள்ளது. இது, அரசியல் பழிவாங்கும் செயல் என்று வத்ராவின் மைத்துனரும், லோக்சபா எதிர்கட்சிதலைவருமான ராகுல் கூறியுள்ளார். மைத்துனர் வத்ராவை கடந்த 10 ஆண்டுகளாக இந்த அரசு வேட்டையாடி வருகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துகூட அந்த வேட்டையின் தொடர்ச்சிதான். அரசியல் உள்நோக்கம் கொண்ட அவதூறுகள் மற்றும் துன்புறுத்தல்களை அவர்கள் எதிர்கொள்ளும் போது, ராபர்ட், பிரியங்கா மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு துணையாக நான் நிற்கிறேன். எந்த விதமான துன்புறுத்தல்களையும் எதிர்கொள்ளும் அளவுக்கு அவர்கள் தைரியமானவர்கள் என்பது எனக்கு தெரியும். அதை அவர்கள் கண்ணியத்துடன் தொடர்ந்து எதிர்கொள்வார்கள். இறுதியில் உண்மையே வெல்லும் என்று ராகுல் கூறியுள்ளார். 2008ல் ஹரியானாவின் குருகிராமில் மூன்றரை ஏக்கர் நிலத்தை ஏழரை கோடிக்கு வத்ரா வாங்கினார். அந்த இடத்தில் மாடி வீடுகள் கட்டுவதற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு உடனே அனுமதி தந்தது. அந்த இடத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. ஆனால் வீடுகள் கட்டவில்லை. நான்கே மாதங்களில், 2.7 ஏக்கர் நிலத்தை DLF நிறுவனத்துக்கு 58 கோடிக்கு விற்று 50 கோடி ரூபாய் லாபம் ஈட்டினார். இந்த நில பேரத்தில் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.