திமுகவுடன் பாஜ நெருக்கம்; சங்பரிவார் அதிருப்தி
ஆர்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கேரளாவின் பாலக்காட்டில் சமீபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில், லோக்சபா தேர்தலுக்கு முன்பும், பின்பும் பாஜவின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்குவங்கம், ஹரியானா மாநிலங்களில் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட குழப்பங்கள், அதீத நம்பிக்கையால், பெரும்பான்மை கிடைக்காமல் போனதாக தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தலில் மட்டுமின்றி கொள்கை கூட்டாளியாக இருந்த சிவாசேனா, காங்கிரஸ் கூட்டணிக்கு சென்றது குறித்து பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஒரே சித்தாந்தத்தில் பயணித்தவர்களை எதிர் சித்தாந்தம் கொண்டவர்களோடு கூட்டணி அமைக்கும் அளவுக்கு நெருக்கடி தந்திருக்க கூடாது என்றனர். அதே போல், காலம் காலமாக பாஜ கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் திமுக போன்ற கட்சிகளுடன் திடீர் நெருக்கம் காட்டுவதும் கவலைக்குறியது எனவும் கூறியிருக்கிறார்கள்.