சூடு பிடிக்கும் அன்னபூர்ணா நிறுவனர் விவகாரம் | Selvaperunthagai | President | Tamilnadu Congress
கோவையில் நடந்த தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி குறித்து அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர் சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாக்களில் வெளியானது. இதையடுத்து அன்னபூர்னா நிறுவனர் சீனிவாசன் நிர்மலா சீதாராமனை சந்தித்து வருத்தம் தெரிவித்தார். அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உண்மையை பேசியவரை மன்னிப்பு கேட்க வைத்து அந்த வீடியோவை வெளியிட்டு அவரை அவமானப்படுத்தி விட்டதாக கொந்தளிக்கின்றனர். இந்த விஷயத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். கோவை ஆர்.எஸ்.புரம், காந்தி பூங்கா ரவுண்டானாவில் சனியன்று மதியம் 3 மணியளவில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கும். சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோரின் ஜி.எஸ்.டி. பாதிப்பு குறித்து முறையிட்டதற்காக நிர்பந்தப்படுத்தி தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்தது பா.ஜவின் அப்பட்டமான பாசிச போக்கு. இதுபோன்ற ஜனநாயக விரோத போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.