CM திறந்த பள்ளியில் 2 மரணம்: அமைச்சர் மகேஷ் பதில் சொல்லணும் Thuvakudi model school 2 student die
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மாதிரி பள்ளியை கடந்த மே மாதம் 8 ம்தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே ஹாஸ்டல்கள் உள்ளன. பலமாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி படிக்கின்றனர். வேலூர் மாவட்டம் கொடிய நத்தத்தை சேர்ந்த பலராமன் மகன் யுவராஜ் வயது 17 பன்னிரண்டாம் வகுப்பு பயோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இன்று காலை ஹாஸ்டல் ரூமில் ஃபேனில் கேபிள் ஒயரில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். துவாக்குடி போலீசார் சடலத்தை கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். இதே பள்ளியில் கடந்த மாதம் 11ம் தேதி திருவள்ளூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கிருத்திகா வயது 17 துப்பட்டாவல் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். அடுத்தடுத்த 2 மாதங்களில் . ஒரு மாணவன், ஒரு மாணவி இறந்ததால், மற்ற மாணவ மாணவிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷின் சொந்தத் தொகுதியான திருவெறும்பூர் துவாக்குடியில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஜூன் மாதம், இதே பள்ளியில் மற்றுமொரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்திருந்தார். துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், தமிழகம் முழுவதுமிருந்து மாணவர்கள், தமிழக அரசு நடத்தும் விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள். இந்த நிலையில், அடுத்தடுத்து இரண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது, பலத்த கேள்விகளை எழுப்புகிறது. உடனடியாக, மாணவர் தற்கொலைகள் குறித்து முழு விசாரணை நடத்தி, மேலும் இது போன்ற துயர நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கடந்த ஜூன் மாதம் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்த விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்தும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். மேலும், மாணவர்களை தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்க, பள்ளிகளில் மனநல ஆலோசகர்களை நியமிப்பது குறித்து பலமுறை கேள்வி எழுப்பியிருந்தோம். இந்த நியமனங்கள் குறித்த முழு விவரங்களையும், பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷின் கடமை என அண்ணாமலை கூறியுள்ளார்.