சந்திரபாபுவுக்கு சாதகமான திருப்பதி லட்டு சர்ச்சை | Tirupati laddoo issue | CM Chandrababu | Ex CM Ja
திருப்பதி லட்டு விவகாரம் ஜெகனுக்கு அடி மேல் அடி திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் எந்த அளவு உலக அளவில் பிரபலமோ அதே அளவு அங்கு கிடைக்கும் லட்டு பிரசாதமும் பிரபலம். ஒரு நாளைக்கு 3 லட்சம் லட்டுகள் வரை பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பக்தர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் டிமாண்டை பயன்படுத்தி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதெல்லாம் கூட நடக்கிறது. இந்த சூழ்நிலையில் தான், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிர வைக்கும் குற்றச்சாட்டை கிளப்பினார். பக்தர்கள் புனிதமாக கருதும் திருப்பதி லட்டு பிரசாதத்தில், முந்தைய ஜெகன் ஆட்சியில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக கூறினார். அடுத்த நாளே திருப்பதி லட்டு தொடர்பான ஆய்வக அறிக்கையும் வெளியானது. மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு தடயங்கள் லட்டில் இருப்பதாக கூறப்பட்டது. முந்தைய ஆட்சியில் இப்படி அநியாயம் செய்தனர்; நாங்கள் அதை தரமானதாக மாற்றி லட்டு தயாரிப்பில் நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார். இப்படி திடுக்கிடும் குற்றச்சாட்டு கிளம்பியதில், சந்திரபாபு ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது பக்தர்கள் மத்தியில் ஜெகன்மோகன் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது; இன்னொன்று தேர்தலில் தோல்வியடைந்த ஜெகன், மீண்டும் ஆந்திர அரசியலில் தலையெடுக்க முடியாத வகையில் சிக்கலையும் இந்த விவகாரம் ஏற்படுத்தி விட்டதாக கூறுகின்றனர். காங்கிரசும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளது.