வெற்று கூச்சல் போடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை | Vanathi | BJP | Amit shah | DMK | Congress
கோவை தெற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை: ராஜ்யசபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் பெயரை மட்டும் கூறி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்காமல் ஏமாற்றி வரும் இண்டி கூட்டணி கட்சிகளை அம்பலப்படுத்தினார். ஆனால், அமித்ஷா பேசியதை திரித்து வழக்கம்போல அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அம்பேத்கரை உண்மையிலேயே மதிப்பவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்க வேண்டும். பாஜவுக்கு மூன்று முறை ஜனாதிபதியை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறை சிறுபான்மை மதத்தை சேர்ந்த அப்துல் கலாம், 2ம் முறை பட்டியலினத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த், 3ம் முறை பழங்குடியினத்தை சேர்ந்த பெண் திரவுபதி முர்முவை ஜனாதிபதி ஆக்கியுள்ளது. இதுதான் உண்மையிலேயே அம்பேத்கரை போற்றுவது. முதல் முறையாக ஒடிசா மாநிலத்தை ஆளும் வாய்ப்பு பாஜவுக்கு கிடைத்ததும் பழங்குடியினத்தை சேர்ந்தவரை முதல்வராக்கியுள்ளது. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களை பாஜ துணை முதல்வராக்கியுள்ளது. அம்பேத்கருக்கு பிறகு, பட்டியலினத்தை சேர்ந்தவரை இப்போது மத்திய சட்ட அமைச்சராக்கியுள்ளது பாஜ அரசு. மத்திய அமைச்சரவையில் பட்டியலின, பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதும் மோடி அரசில்தான். காங்கிரஸ் நினைத்திருந்தால் 2004, 2009ல் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் ஆக்கியிருக்கலாம். வாய்ப்பு இருந்தும் அதை செய்யவில்லை. கர்நாடகாவில் பட்டியலினத்தவர்களின் ஓட்டுகளை பெற்று பலமுறை ஆட்சியை பிடித்த காங்கிரஸ் ஒருமுறை கூட பட்டியலினத்தை சேர்ந்தவரை முதல்வராக்கவில்லை. இதுதான் அம்பேத்கரை மதிப்பதா?