1000 பார்களை திறந்த திமுக அரசு: வானதி திடுக் | Vanathi MLA | DMK vs BJP | TN Govt opened FL2 bar | T
திமுக அரசு 1000 மதுபான பார்கள் திறந்ததை கண்டித்து பாஜ எம்எல்ஏ வானதி வெளியிட்ட அறிக்கை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவோம் என்று 2021 சட்டசபை தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும், அதற்கு நேர் எதிராக மது விற்பனையை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மதுக்கடைகளை மூடும் வாக்குறுதி என்ன ஆனது என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மக்களும் கேள்வி கேட்க தொடங்கியதால், 500 மதுக்கடைகளை திமுக அரசு மூடியது. ஆனால், டாஸ்மாக் மதுக்கடைகள் மூடியிருக்கும் நேரங்களில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதை கண்டுகொள்வதில்லை. இப்படி தமிழகம் எங்கும் மது நீக்கமற நிறைந்திருக்கும் நிலையில், அதிகம் மது விற்பனையாகும் இடங்களில், FL2 எனப்படும் 1,000 தனியார் பார்களை திறக்க திமுக அரது அனுமதி வழங்கியுள்ளது. இந்த பார்களுக்கு டாஸ்மாக்தான் மதுபானங்களை விநியோகம் செய்கிறது. டாஸ்மாக் செயல்படும் நேரத்தைவிட FL2 பார்கள் செயல்பட கூடுதலாக 2 மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியுரிமை பெற்ற கிளப்புகளின் உறுப்பினர்கள் மது அருந்த மட்டுமே FL2 உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால், 1000 பார்களுக்கு FL2 உரிமம் வழங்குவதால், கிளப் உறுப்பினர்கள் மட்டுமல்லாது, யார் வேண்டுமானாலும் மது வாங்கலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாகி விட்டது. இதற்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களே காரணம். பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டுமானால், மது, போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். ஆனால், மது விற்பனையை எப்படி அதிகரிக்கலாம் என யோசித்து, யோசித்து திமுக அரசு செயல்படுகிறது. 1000 பார்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். முழு மதுவிலக்கை கொண்டுவர திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வானதி வலியுறுத்தி உள்ளார்.