திராவிடத்தின் பெயரால் தமிழர் அடையாளத்தை மறைப்பதா? | Vanathi Srinivasan | Bjp | CM stalin
பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திருக்குறளை பின்பற்றினால்தான் தமிழ்நாடும், உலகமும் காப்பாற்றப்படும். அதற்கு திருவள்ளுவரை யாரும் கபளீகரம் செய்யாமல் பார்த்துகொள்ள வேண்டும். வள்ளுவர், வள்ளலார் போன்ற தமிழகத்தில் சமத்துவத்தை பேசிய மாமனிதர்களை ஒரு கூட்டமே களவாட முயற்சிக்கிறது என கூறியிருக்கிறார். திருவள்ளுவரும், திருஅருட்பிரகாச வள்ளலாரும் இந்து மதத்தில் பிறந்தவர்கள். இந்து ஆன்மிக ஞானத்தை மக்களுக்கு போதித்தவர்கள். எப்போதும் திருநீறு அணிந்து காணப்படும், அண்மை காலத்தில் வாழ்ந்த திருஅருட்பிரகாச வள்ளலாரையே, திருநீறு இல்லாத படத்துடன் வெளியிட்டு, அவரின் அடையாளத்தை மறைப்பவர்கள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவரின் அடையாளத்தை மறைப்பதில் வியப்பில்லை. திராவிடத்தின் பெயரால் தமிழ், தமிழரின் அடையாளத்தையே மறைப்பவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காலகட்டம் இது. திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்று அதிகாரத்தையே வைத்தவர் திருவள்ளுவர். கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் இந்த திருக்குறளுக்கு தமிழறிஞர் மு.வரதராசனார் தரும் விளக்கம்: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.