ராகுல், பிரியங்காவின் பிரசாரம் வீண்: வானதி தாக்கு | Vanathi | BJP | Rahul | Priyanka |Congress| Modi
கோவை தெற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ வானதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தலுக்கு பிறகு ஹரியானா மாநிலத்திலும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் சட்டசபை தேர்தல் நடந்தது. ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48ல் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து 3வது முறையாக பாஜ ஆட்சி அமைக்கிறது. லோக்சபா தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தாலும், 99 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, தான் வென்று விட்டதை போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவராக இல்லாமல் அக்கட்சியை வழிநடத்தி வரும் ராகுலை, பெரும் தலைவர் போல ஊடகங்கள் சித்தரித்தன. ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும். ராகுல் மாயாஜாலம் நிகழ்த்துவார் என, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே திட்டமிட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர். ஊடகங்களில் ராகுல் பற்றிய செய்திகளே அதிகம் வந்தன. ஆனால் மக்கள் பாஜவையே தேர்ந்தெடுத்து உள்ளனர்.