திரிணாமுல் காங்., தலைவர் பதவிக்கு புதிய நபர் நியமனம்: மம்தாவுக்கு வந்த சோதனை
#TMC #TrinamoolCongress #MamataBanerjee #NewChiefforTMC #ArupRoy #RitaPrata #KunalGosh #WestBengalPolitics #SuvenduAdhikari #BJP மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 208 இடங்களில் வென்று பாஜ ஆட்சி அமைத்தது. தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்த திரிணாமுல் காங்., 80 இடங்களில் மட்டும் வென்றது. 3 முறை முதல்வர் பதவி வகித்த மம்தாவே பவானிபூர் தொகுதியில் தோல்வியை தழுவினார். ஆட்சி அதிகாரம் கைவிட்டுப்போனதற்கு, மம்தாவின் உறவினரும், கட்சியில் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியின் அராஜகப் போக்கே காரணம் என திரிணாமுல் நிர்வாகிகள் சிலர் கொடிபிடித்தனர். கட்சித் தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக, எம்எல்ஏ ரிடா பிரதாவை கட்சியில் இருந்து நீக்கி, மம்தா உத்தரவிட்டார். அவரது தலைமையில் அணி திரண்ட 58 எம்எல்ஏக்கள், கட்சி தலைமையின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டனர். ரிடா பிரதாவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்துள்ளதாக சபாநாயகரிடம் கடிதம் தந்தனர். இதை சபாநாயகர் ஏற்றதால், ரிடா பிரதா எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். மம்தா தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரிடா பிரதா தலைமையில் கொல்கத்தாவில் நேற்று நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், 60 எம்எல்ஏக்கள், முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். மம்தாவை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் புதிய தலைவராக அரூப் ராய் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே போல், அபிஷேக் பானர்ஜி வசம் இருந்த பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தங்கள் தரப்பே ஒரிஜினல் திரிணாமுல் காங்கிரஸ் என்றும், தங்களுக்கே கட்சிப் பெயர், சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தும் உரிமை உள்ளதாகவும் ரிடா பிரதா தரப்பினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக விரைவில் தேர்தல் கமிஷனை அணுக உள்ளதாகவும் கூறினர்.