பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகருக்கு அடி உதை | Chennai | Padappai | ADMK
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை சேர்ந்தவர் பொன்னம்பலம், வயது 60. குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் அணி இணை செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் 2 பெண்கள் குடியிருந்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன் பொன்னம்பலம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் வீட்டை காலி செய்த பெண்கள் கீழ்படப்பை பகுதிக்கு குடிமாறி சென்றனர். இருந்தும் விடாத பொன்னம்பலம் செல்போனில் அழைத்து டார்ச்சர் செய்துள்ளார். ஆத்திரமடைந்த பெண்கள் பொன்னம்பலத்திடம் பேசி அவர்கள் இடத்துக்கு வர வைத்தனர். அங்கு சென்ற பொன்னம்பலத்தை அவரால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள், அவரது தோழிகள் என 4 பேர் சேர்ந்து ரவுண்டு கட்டி வெளுத்தனர். துடப்பக்கட்டையால் சரமாரியாக அடித்து வீட்டுக்கு வெளியே தள்ளி கதவை சத்தினர். தொடர்ந்து பொன்னம்பலம் செய்த சில்மிஷம் குறித்து மணிமங்கலம் போலீசில் பெண்கள் புகார் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் பொன்னம்பலத்தை கைது செய்து பெண் வன்கொடுமை சட்டம், பெண்களிடம் ஆபாசமாக பேசுதல், பெண்களை தாக்கியது உட்பட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும் அவரை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.