அண்ணா பல்கலை விவகாரம் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்! | Anna University | Constable suspended | Vellore
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தை உலுக்கியது. மாணவிக்கு 25 லட்சம் இழப்பீடும் 3 பெண் ஐபிஎஸ்கள் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவையும் ஐகோர்ட் அமைத்துள்ளது. தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணைய அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக அரசுக்கு எதிராக அரசியல் கட்சியினரும் பல கட்ட போராட்டங்களை முன் எடுத்துள்ளனர். சமூகவலை தளங்களில் சட்டம் ஒழுங்குக்கு எதிராகவும் திமுக அரசுக்கு எதிராகவும் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான ஒரு கண்டன பதிவில் வேலூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் அன்பரசன் சர்ச்சையாக ஒரு கருத்தை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விசாரணையில் தகவல் உண்மை என்பதால் அன்பரசனை சஸ்பெண்ட் செய்து எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில்; பேஸ்புக்கில் அண்ணா பல்கலை சம்பவம் தொடர்பான பதிவுக்கு மானங்கெட்ட திமுக அரசு என அன்பரசன் கமெண்ட் செய்துள்ளார். இது சீருடை பணி விதிகளுக்கு எதிரானது என்ற புகாரில் விசாரணை நடத்தி உறுதி செய்யப்பட்டது. அவரது கமெண்ட் நீக்கப்பட்டதுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்றனர்.