மாவோயிஸ்ட்கள் தாக்குதல்: துணிச்சல் போலீஸ் அதிகாரி மரணம் | ASP akash rao dies 2 officers injured
2026 மார்ச் 31க்குள் இந்தியாவில் இருந்து மாவோயிஸ்ட்கள் ஒழித்துக் கட்டப்படுவார்கள் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார். அதன்படி சத்தீஸ்கர், பீகார், மகாராஷ்ட்ரா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அந்த வகையில் சத்தீஸ்கரில் கடந்த மாதம் மாவோயிஸ்ட் இயக்கத்தின் அகில இந்திய முக்கிய தலைவர் நம்பலா கேசவ் ராவ் என்ற பசவராஜுவை பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர். கேசவராவ் கொல்லப்பட்டதை கண்டித்து மாவோயிஸ்ட் இயக்கம் வரும் 10ம்தேதி பாரத் பந்த் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதையொட்டி மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், சுக்மா மாவட்டத்திலுள்ள கோன்டா Konta பகுதியில் உள்ள குவாரியில் பொக்லைன் எந்திரத்துக்கு மாவோயிஸ்ட்கள் தீ வைத்து அடாவடி செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது. உடனடியாக கோன்டா கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆகாஷ் ராவ் உள்ளிட்ட 3 போலீஸ் அதிகாரிகள் ஜீப்பில் விரைந்தனர். குவாரியை நெருங்கியதும் ஜீப்பை விட்டு இறங்கி ஆகாஷ் ராவும் போலீஸ் அதிகாரிகளும் நடந்து சென்றனர். அப்போது, மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடி வெடித்தது. ஆகாஷ் ராவ் உள்ளிட்ட 3 போலீஸ் அதிகாரிகள் படுகாயமடைந்தனர். மூவரும் கோன்டா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, ஆகாஷ் ராவ் இறந்தார். மற்ற இருவரது நிலைமை சீரியசாக இருப்பதாக சத்தீஸ்கர் போலீசார் கூறினர். குண்டு வெடிப்பில் பலியான ஏ.எஸ்.பி ஆகாஷ் ராவ் துணிச்சல் மிக்க போலீஸ் அதிகாரி. மாவோயிஸ்ட்களுக்கு எதிராக பல அதிரடி வேட்டைகளை நடத்தி சாதித்து காட்டியவர். அதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். மாவோயிஸ்ட்கள் அறிவித்துள்ள பாரத் பந்தின்போது, சுக்மா மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க கடந்த 2 நாளாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். காட்டுப்பகுதிகளில் போலீஸ் முகாம்களை உருவாக்கி, அங்கு போலீசாரை நிறுத்தும் பணியை மேற்பார்வை செய்து வந்தார். அப்போதுதான் குவாரியில் உள்ள பொக்லைன் எந்திரத்துக்கு மாவோயிஸ்ட்கள் தீ வைத்ததாக தகவல் வந்தது. அதுபற்றி விசாரிக்க சென்ற இடத்தில்தான் கண்ணி வெடியில் சிக்கி வீரமரணமடைந்துள்ளார். அவர் சென்ற போலீஸ் வாகனத்தையும் மாவோயிஸ்ட்கள் தகர்த்துள்ளனர். அதனால், ஆகாஷ் ராவை தீர்த்துக் கட்ட மாவோயிஸ்ட்கள் திட்டம் போட்டு செயல்பட்டிருக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் கோன்டா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையை சத்தீஸ்கர் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.