தம்பதியர் பரிதாப மரணம்; காரணம் யார்? கலெக்டர் அதிரடி bike Fell huge pit husband wife dies
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த சேர்வகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் 40. இவரது மனைவி ஆனந்தி 35. இவரது மகள் தீக்க்ஷனா வயது 13. எட்டாம் வகுப்பு படிக்கிறார். கணவன், மனைவி மற்றும் மகள் மூவரும் திருநள்ளாறு கோயிலுக்கு சென்று விட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு தாராபுரம் திரும்பினர். தாராபுரத்தில் இருந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். தாராபுரம் அருகே குள்ளாய்ப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்க சாலையோரத்தில் பெரியளவில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அந்த இடத்தில் பைக் சென்றபோது பாலம் கட்ட தோண்டப்பட்ட 15 அடி பள்ளத்தில் பைக் விழுந்தது. இதில் நாகராஜ், ஆனந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த தீக் ஷனா கதறி அழுது கொண்டிருந்தார். அதிகாலை நேரம் என்பதால் யாரும் உதவிக்கு வரவில்லை. காலை 6.30 மணிக்கு அவ்வழியாக சென்ற போலீஸ்காரர் ஒருவர், சிறுமியின் அழுகுரலை கேட்டு பள்ளத்தில் எட்டிப் பார்த்துள்ளார். அப்போதுதான் விபத்து நடந்த விஷயமே தெரிந்தது. காயத்துடன் அழுது கொண்டிருந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கணவன், மனைவி சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. சிகிச்சையில் இருந்த சிறுமி தீக் ஷனாவிடம் போலீசார் விசாரித்தபோது விபத்துக்கான காரணம் தெரிய வந்தது. பாலம் கட்டுமானப் பணி நடந்த இடத்தில் பைக் வந்தபோது பின்னால் ஒரு லாரி வந்துள்ளது. லாரி டிரைவர் ஹார்ன் அடித்ததால் நாகராஜ் பைக்கை ஓரம் கட்டினார். அப்போதுதான், பள்ளத்தில் பைக் விழுந்தது என தீக் ஷனா கூறினார். பாலம் கட்டுமானப்பணி நடந்த இடத்தில் மின் விளக்கு இல்லை. கும்மிருட்டாக இருந்தது. பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் தடுப்புகளும் வைக்கப்படவில்லை. பாலம் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் சம்பவ இடத்துக்கு சென்று விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தார். உயிரிழந்த நாகராஜ் மற்றும் ஆனந்தி குடும்பத்தினருக்கு 6 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். படுகாயமடைந்த தீக் ஷனாவுக்கு மருத்துவச் செலவுக்காக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் கலெக்டர் கூறினார். பாலப்பணியை செய்து வரும் ஒப்பந்ததாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.