பாலத்தில் மோதிய சொகுசு கார்: நகைக்கடைகாரர் குடும்பத்துக்கு சோகம் car accident vazhapadi 2 women
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதா ராம் 62. கர்நாடக மாநிலம் ஹோஸ்பேட்டில் ஜோதாராம் குடும்பத்தினர் நகைக்கடை நடத்துகின்றனர். ஈரோட்டில் நடக்கும் திருமணத்துக்காக ஜோதாராம், அவரது மனைவி ஜோஹிதேவி 55. இவர்களது மகள் அம்யா 42 மற்றும் உறவினர் ஜோஹாராம் 52, அவரது மனைவி ஜோதிதேவி 55, ஜோஹாராமின் சகோதரர் ரோனாராம் 52, அவரது மனைவி சோட்கி 50 ஆகிய 7 பேரும் காரில் புறப்பட்டனர். ஈரோட்டுக்கு செல்வதற்கு முன், திருவண்ணாமலை கோயிலுக்கு இன்று அதிகாலை சென்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு ஈரோடுக்கு புறப்பட்டனர். இன்று மாலை வாழப்பாடி அருகே புதுப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார், பாலத்தின் இடதுபுற தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் ஜோஹி தேவி, ஜோஹாராம், ரோனாராம் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜோதாராம், அம்யா, சோட்கி ஜோதிதேவி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். வாழப்பாடி போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு வாழப்பாடியில் உள்ள மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அங்கு, சோட்கி இறந்தார். ஜோதாராம், அம்யா, ஜோதிதேவி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதிவேகத்தில் கார் சென்றதால் விபத்து நேர்ந்துள்ளதாக, முதல் கட்ட விசாரணயில் தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து இன்று அதிகாலையிலேயே திருவண்ணாமலைக்கு சென்ற அவர்கள். அங்கிருந்து மீண்டும் ஈரோட்டுக்கு திரும்பும் வழியில்தான் விபத்து நடந்துள்ளது. தூக்கமின்றி டிரைவர் காரை ஓட்டியிருக்கலாம்; கணநேரம் கண் அசந்ததால் விபத்து நேர்ந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சிகிச்சையில் இருக்கும் மூவர் உடல்நலம் தேறி, விஷயத்தைச் சொன்னால்தான் விபத்துக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் கூறினர். கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியானது கர்நாடகாவில் உள்ள குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.