கைதியை பாதுகாக்க வலியுறுத்தி வக்கீல் பரபரப்பு புகார்! Central Prison Trichy | Madurai Prisoner
மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் ஹரஹரசுதன். வயது 25. கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு 2020ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். அதில் 400க்கும் மேல் மதிப்பெண் பெற்றார். ஐடிஐ படிக்க விண்ணப்பித்ததால் திருச்சி சிறைக்கு 6 மாதத்துக்கு முன் மாற்றப்பட்டார். திருச்சி சிறையில் சில நாட்களுக்கு முன் ஜெயிலர் மணிகண்டன், ஹரஹரசுதனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இருட்டு அறையில் அடைத்து வைத்து கொடுமை படுத்துவதாகவும் கூறப்படுகிறது. மதுரையை சேர்ந்த வக்கீல் ஜெயகணேசன் அவரை பார்க்க முயற்சித்தும் அனுமதி மறுப்பதாக புகார் தெரிவித்தார். சிறையில் ஹரஹரசுதன் கொடூர சித்ரவதை அனுபவிப்பதாகவும், இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்திருப்பதாகவும் கூறினார். ஹரிஹரசுதனின் தாய் அவரை சந்திக்க அனுமதி கேட்டும் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தனது மகனை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.