வீடுகள் இடிப்பதை எதிர்த்து ரோட்டில் உட்கார்ந்த மக்கள் | Thiruverkadu | Viral issue
சென்னை அடுத்த திருவேற்காடு நகராட்சியில், கோலாடி ஏரிக்கரையை ஆக்ரமித்து கட்டப்பட்டு இருந்த 27 வீடுகள் உள்ளிட்ட கட்டங்களை கடந்த மாதம் வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர். எஞ்சியிருக்கும் 1200க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட ஆக்ரமிப்பு கட்டடங்களை 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று தனித்தனியாக நோட்டீஸ் ஒட்டினர். செல்லியம்மன் நகரில் வசிக்கும் தச்சு தொழிலாளி சங்கர் வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்நிலையில், நேற்று சங்கர் திடீரென தூக்கு போட்டு இறந்தார். வீட்டை இடிப்பதாக நோட்டீஸ் ஒட்டியதால், மனஉளைச்சலுக்கு ஆளாகி அவர் வாழ்க்கையை முடித்து கொண்டதாக அவரது மனைவி திருவேற்காடு போலீசில் புகார் அளித்தார். சங்கர் மரணத்திற்கு நீதி கேட்டும், வீடுகளை இடிக்க கூடாது என்று வலியுறுத்தியும் செல்லியம்மன் நகர் மக்கள், திருவேற்காடு- அம்பத்தூர் சாலையில் மறியல் செய்தனர். வாகன போக்குவரத்து தடைபட்டது. அவர்களை அப்புறப்படுத்த வந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். 50 ஆண்டுகளாக இங்குதான் வசிக்கிறோம். வரி கட்டுகிறோம் எங்கள் வீடுகளை இடிக்க கூடாது என வாதம் செய்தனர்.