சில்லி சிக்கன் கடை மீது தாக்குதல் தடுத்தவரின் மண்டை பிளந்தது
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி 5வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜா ஆறுமுகம். இவரது தம்பி சங்கர், சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். மது போதையில் இவரது கடைக்கு வந்த 5 பேர், சிக்கன் 65 உள்ளிட்ட பொறித்த உணவுகளை வாங்கிக்கொண்டு பணம் தராமல் அங்கிருந்து நகர முயன்றுள்ளனர். கடை ஓனர் சங்கர் அவர்களிடம் பணம் கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அங்கு வந்த சங்கரின் அண்ணன் கவுன்சிலர் ராஜா, அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். போதை ஆசாமிகள் கடையில் இருந்த பொருட்களை சூறையாடியதோடு, பீர் பாட்டிலால் ராஜாவின் மண்டையில் ஓங்கி அடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் கவுன்சிலர் ராஜா, சங்கரன்கோயில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டார். எஞ்சிய 4 பேரை போலீசார் தேடுகின்றனர்.