தொழிலதிபர் மாயமான வழக்கில் பகீர் திருப்பம் | Coimbatore | Karur | Dubai Travels Agent
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சிகாமணி, வயது 47. 20 ஆண்டுகளாக துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். மனைவி,குழந்தைகள் சொந்த ஊரில் வசிக்க, சிகாமணி மட்டும் துபாயில் வசித்து வந்தார். துபாயில் அவரின் வீட்டருகே வசித்த கோவையை சேர்த்த சாரதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெரியவர சிகாமணியை அவரது மனைவி பிரியா கண்டித்துள்ளார். சாரதாவின் உறவைத் துண்டிக்கவும் அவர் அறிவுறுத்தி வந்துள்ளார். இருந்தும் இருவருக்கும் இடையே பழக்கம் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி மனைவிக்கு போன் செய்த சிகாமணி வேலை தொடர்பாக கோவை வந்திருப்பதாக கூறியுள்ளார். வேலை முடிந்த பிறகு தஞ்சாவூர் வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் ஏப்ரல் 24ம் தேதிக்குப் பிறகு சிகாமணியை தொடர்பு கொள்ள முடியவில்லை. மூன்று நாட்களாக கணவரைத் தேடிய மனைவி பிரியா, பீளமேடு காவல் நிலையத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி புகார் அளித்தார். கணவர் மாயமான விவகாரத்தில் சாரதா, அவரது குடும்பத்தினர் மீது சந்தேகம் இருப்பதாகப் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிகாமணி காணாமல் போனதாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சிகாமணி கோவை வந்த போது அவருடன் சாரதாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து சாரதாவை விசாரிக்கச் சென்ற போலீசார் அவர் இல்லாததால் அவரது தந்தை தியாகராஜனைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்த அவர் போலீசாரின் அதட்டலில் பல அதிரவைக்கும் தகவல்களை சொன்னார். எனது மகள் சாரதாவிடம் 6 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு அதை திருப்பி தராமல் சிகாமணி சண்டை போட்டுள்ளார். மகளை தாக்கி சித்ரவதை செய்து வந்துள்ளார். அதனால் சிகாமணியை குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்தோம் என்றார். துபாயில் இருந்து வந்த சிகாமணியை பீளமேடு காந்திநகர் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து மதுவிலும், சிக்கனிலும் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்துள்ளனர். பின்னர் சாரதா அவரது தந்தை தியாகராஜன், தாய் கோமதி , தங்கை நீலா மற்றும் உறவினர்களான புதியவன்,ஸ்வாதி உள்ளிட்டோர் சிகாமணியை அடித்தே கொன்றுள்ளனர். பின்னர் உடலை கார் மூலம் பரமத்தி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசிவிட்டு கோவை திரும்பி உள்ளனர். சிகாமணியின் உடலை மீட்ட கரூர் போலீசார் அடையாளம் தெரியாத பிணம் என வகைப்படுத்தி போலீசார் அதிகாரிகளின் முன்னிலையில் உடற்கூராய்வு செய்து மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டது தெரியவர கோவை போலீசார் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சாரதாவின் தந்தை தியாகராஜன், தாய் கோமதி, தங்கை நீலா உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கின் முக்கிய குற்றவாளியான சாரதா தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். துபாய்க்கு மீண்டும் சாரதா தப்பி விடாமல் இருக்க கோவை மாநகர போலீஸ் சார்பில் ஏர்போர்ட் மற்றும் துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குடும்ப பிரச்சினையில் மகளின் முதல் கணவர் குணசீலனை , தியாகராஜன் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். இப்போது ஜாமினில் வெளியே இருக்கும் அவர் தற்போது மகளுடன் தொடர்பில் இருந்தவரையும் கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.