அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் கமலா-ட்ரம்ப் காரசார விவாதம் trump| kamala harris | US presidental
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட்டுள்ளார். அதிபர் வேட்பாளர்கள் இருவரும் டிவி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் சளைக்காமல் பதிலடி கொடுத்து தெறிக்க விட்டனர். அவற்றில் சில முக்கிய விவாதங்களை பார்க்கலாம். விவாதத்தை தொடங்கிய கமலாஹாரிஸ், கடந்த ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்கா பொருளாதார மந்தநிலை, வேலை வாய்ப்பின்மை சிக்கலையும் எதிர்கொண்டது. நான் அதிபர் ஆனால், வேலை வாய்ப்புகள் தரும் பொருளாதாரத்தை கட்டமைப்பேன் என்றார். இதை மறுத்த ட்ரம்ப், எனது ஆட்சியில்தான் அமெரிக்காவின் பொருளாதாரம் மிக செழிப்பாக இருந்தது என்றார். கருக்கலைப்பு உரிமை பற்றி பேசிய கமலா, ட்ரம்ப் அதிபர் ஆனால், கருக்கலைப்புக்கு தடை வரும். தகாத உறவு மூலம் உருவாகும் கருவை கலைப்பது கூட கடினம் ஆகிவிடும் என்றார். பதிலளித்த ட்ரம்ப், 9வது மாதத்தில் கூட கருக்கலைப்பை அனுமதிக்க ஜனநாயக கட்சி விரும்புகிறது எனக்கூறினார். 2 ஆண்டுகளுக்கு முன்பு கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 3 பேர் டிரம்ப்பால் நியமிக்கப்பட்டவர்கள் என்று கமலா சுட்டிக்காட்டினார். ரஷ்யா-உக்ரைன் போர் பற்றி பேசிய கமலா ஹாரிஸ், ஜெலன்ஸ்கியுடன் நங்கள் நல்லுறவு வைத்துள்ளோம். ட்ரம்ப் அதிபராக இருந்திருந்தால், புடின் உக்ரைனில் அமர்ந்து கொண்டு ஐரோப்பிய நாடுகளை தாக்குவது பற்றி திட்டம் திட்டி கொண்டிருப்பார் என்றார். ட்ரம்ப் பதிலளிக்கும்போது, போரில் உக்ரைன் வெல்ல வேண்டும் நினைக்கிறீர்களா? கமலாஹாரிஸ் ரஷ்யா-உக்ரைன் போரை தடுக்க தவறிவிட்டார். அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான துணை அதிபர் அவர்தான் என்றார். இஸ்ரேல்-காஸா போர் பற்றி பேசிய ட்ரம்ப், நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போரே நடந்து இருக்காது. இஸ்ரேல் தன்னை தற்காத்து கொள்வதற்கான உரிமை இருப்பதாக கூறிய கமலாவின் கருத்தை சுட்டிக்காடிய ட்ரம்ப், இஸ்ரேல் மீது கமலாஹாரிசுக்கு வெறுப்பு. அவர் அதிபர் ஆகிவிட்டால் அந்த நாடே காணாமல் போய்விடும் என்றார். பிரச்னையை ட்ரம்ப் பிரித்தாள முயற்சிப்பாக கமலா கூறினார். சர்வாதிகள் மீது அபிமானம் வைத்திருக்கும் ட்ரம்ப், தம்மையே ஒரு சர்வாதிகாரியாக பார்க்க விரும்புகிறார் என்றார்.