ஒன்றரை ஏக்கர் சொத்தால் சிதைந்த குடும்பம் | Erode | Asset Issue
ஈரோடு வேப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ருக்மணி, வயது 65. இவரது மகன் ரவிக்குமார், மகள் பிரியதர்ஷினி. மகளுக்கு திருமணமாகிவிட்டது. ருக்மணி தனது மகனுடன் வேப்பம்பாளையம் வீட்டில் வசித்து வந்தார். திங்களன்று மாலை வீட்டில் அசைவின்றி கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசிடம் கூறினர். அங்கு வந்த போலீசார் ருக்மணி சடலத்தை மீட்டனர். அப்போது கை,கால் எலும்பு முறிந்த நிலையில் இருந்தது. பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் ஆய்வு நடந்தபோது ருக்மணி மகன் ரவிக்குமார் அங்கு வந்தார். போலீசை கண்டதும் ஓட்டம் எடுத்தார். அவரை துரத்தி பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். பல அதிர்ச்சிகள் வெளிவந்தது. ருக்மணியின் கணவர் பழனிச்சாமிக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அதை தன் பெயருக்கு எழுதி தருமாறு ரவிக்குமார் தந்தையுடன் தகராறு செய்துள்ளார். 2022 மே 2ல் அவரை மரக்கட்டையால் அடித்து கொலை செய்தார். போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். ஜாமின் பெற்று வந்த பின் தாயுடன் வசித்து வந்தார். 2 வருடங்கள் அமைதியாக இருந்தவர் மீண்டும் சொத்து கேட்டு தகராறு செய்துள்ளார். தாய் ருக்மணியிடம் அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது. ஞாயிறன்று மாலை வழக்கம் போல வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது போதையில் இருந்த ரவிக்குமார் தாய் என்றும் பாராமல் அடித்துள்ளார். கையில் கிடைத்த கட்டை,கம்பி எடுத்து தாக்கி உள்ளார். கை,கால் எலும்பு முறிந்த நிலையில் ருக்மணி சுருண்டு விழுந்து இறந்தார். பின்னர் தாயின் சடலத்துடன் ரவிக்குமார் ஒரு நாள் முழுவதும் இருந்துள்ளார். மறுநாள் அவர் வெளியே சென்ற நிலையில் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டின் உள்ளே பார்த்தனர். அப்போது தான் ருக்மணி கொல்லப்பட்டது வெளியில் தெரியவந்தது. தற்போது பிரேத பரிசோதனை முடிவில் ருக்மணி உடலில் 60 இடங்களில் காயம் இருப்பது தெரியவந்தது. ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர் சொத்துக்காக சொந்த மகனே தந்தையை கொலை செய்த நிலையில், தாயும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.