இஷ்டத்துக்கு விளையாடிய 2 பேரை கைது செய்தது போலீஸ்! | Fake certificates | Press | Chennai
சென்னை வில்லிவாக்கத்தில் ஒரு கட்டடத்தில் பத்திரிகையாளர் சங்கம் என்ற பெயரில் ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்தது. அங்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்து பணம் வசூலிப்பதாக ராஜமங்கலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. வக்கீல்கள் என்ற போர்வையில் சிலர் அமர்ந்து கொண்டு அங்கு கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் புகார் எழுந்தது. இதனால் 13வது நீதிமன்ற நடுவர் தர்மபிரவுவிடம் தகவல் தெரிவித்து விட்டு போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். யுனிவர்செல் பத்திரிகை ஊடக சங்கம் என்ற பெயரில் அந்த அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. அங்கு சோதனையிட்ட போது பள்ளி, கல்லூரிகளில் வழங்கும் சான்றிதழ்கள் போலியாக அச்சடித்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திராவில் எல்எல்பி படிப்பதற்கான சான்றிதழ்களும் தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு இருந்த இரண்டு லேப்டாப், மொபைல், பென் டிரைவ் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த அலுவலகத்தை நடத்தி வந்த விநாயகபுரத்தை சேர்ந்த விஜய் ஆனந்த், பொருளாளராக செயல்பட்ட ஆவடி ரூபன் ஜெர்மையா ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அனைத்து பள்ளி, கல்லூரி சான்றிதழ்களையும் போலியாக தயாரித்து கொடுத்துள்ளனர். மேலும் அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிந்து கொண்டு, அங்கு வேலை வாங்கி தருவதாக போலி ஆவணம் தயாரித்து பலரை ஏமாற்றி உள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் வக்கீல்கள் என கூறி உள்ளனர். ஆனால் அதில் ரூபன் ஜெர்மையாவின் சான்றிதழை சோதனை செய்ததில் அது போலி என தெரிய வந்துள்ளது.