திருச்சிக்கு பிறகு கோவையில் நடந்த சம்பவம் | flydubai flight | Dubai to Kozhikode
திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு நேற்று மாலை புறப்பட்ட ஏர் இண்டியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் திருச்சிக்கே திரும்ப முடிவு செய்த விமானிகள், வானிலேயே இரண்டரை மணிநேரம் வட்டமடித்து விட்டு 8.15 மணியளவில் பத்திரமாக தரையிறக்கினர். இந்த சம்பவத்தால் உண்டான பரபரப்பு அடங்குவதற்கு முன் இன்று காலை துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக கோவையில் தரையிறக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு இன்று காலை ஃபிளை துபாய் நிறுவன விமானம் புறப்பட்டது. 164 பயணிகள் இருந்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவியது. இப்படிப்பட்ட சூழலில் தரையிறக்குவது ஆபத்தாக முடியும் என்பதால், கோவைக்கு விமானத்தை அதிகாரிகள் திருப்ப முடிவு செய்தனர். கோழிக்கோடிலேயே வானில் அரை மணி நேரத்துக்கு மேலாக வட்டமிட்ட அந்த விமானம், பிறகு, கோவைக்கு புறப்பட்டது. கோழிக்கோடு ஏர்போர்ட்டுக்கு வந்திருந்த குடும்பத்தினரும், உறவினர்களும் பதற்றமடைந்தனர். காலை 7. 45 மணியளவில் கோவை ஏர்போர்ட்டில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது பிறகே கோழிக்கோடில் இருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்