நிச்சயமாக செய்வோம்; ஈரான் உச்ச தலைவர் மிரட்டல்! | Iran's supreme leader | Khamenei threatens |Israel
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஓராண்டாக போர் நீடிக்கிறது. ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ், ஹெஸ்புலா அமைப்பு தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனா். ஹமாஸ் ஆயுதக்குழு, ஹெஸ்புலா அமைப்பு, ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. இஸ்ரேலும் சளைக்காமல் தொடர்ந்து எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் ஹெஸ்புலா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார். இதன் எதிரொலியாக அக்டோபர் 1ல் ஈரான் தரப்பில் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக கடந்த வாரம் இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் ஈரானின் 20 ராணுவ தளங்கள் மீது குண்டுகளை வீசின. இதில் ஈரானின் முக்கிய பகுதிகள் தரைமட்டமானது. கொதித்தெழுந்த ஈரானின் உச்ச தலைவர் கமெனி, படைகளை தயாராக இருக்கும்படி உத்தரவிட்டார். சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்து இருந்தார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என ஈரானுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளோம். மீறி ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்ய வேண்டாம் என ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுப்பதாக கூறி இருந்தார். இந்த சூழலில் தலைநகர் தெஹ்ரானில் மாணவர்கள் மத்தியில் கமெனி இன்று பேசினார். எங்களுக்கு எதிராக உள்ள சக்திகளை எதிர்கொள்ள தேவையான அனைத்தையும் நாங்கள் நிச்சயமாக செய்வோம். இது பழிவாங்கல் பற்றியது அல்ல. இந்த விஷயத்தில் நாட்டின் அதிகாரிகள் தயங்க மாட்டார்கள். அலட்சியம் காட்ட மாட்டார்கள். ஈரான் மற்றும் நட்பு நாடுகள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நிச்சயம் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்து உள்ளார்.