போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட உறவினர்கள் | Kanchipuram | Police Investigation
காஞ்சிபுரம் அடுத்த திம்ம சமுத்திரம் அருகே உள்ள ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். செங்கல்பட்டில் வாட்ச் மேன் ஆக பணிபுரிந்து வருகிறார். வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே சுரேஷ் வீட்டுக்கு வருவார் என கூறப்படுகிறது. இவரது மனைவி அஸ்வினி வயது 29. தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளது. அஸ்வினியும் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இவர்களது வீடு தனிமையான பகுதியில் இருப்பதாலும், அருகிலேயே டாஸ்மாக் கடை இருந்ததாலும் அஸ்வினி வையாவூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து உள்ளார். விடுமுறையில் கணவர் வரும்போது அந்த வீட்டுக்கு செல்வதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சென்ற 23ம் தேதி சுப நிகழ்ச்சிக்காக சென்ற அஸ்வினி, இரவு கணவர் வீட்டில் தங்கி காலை வருவதாக சென்றுள்ளார். மறுநாள் மதியம் 2 மணி ஆகியும் அஸ்வினி திரும்பவில்லை என கூறப்படுகிறது. போனையும் எடுக்காததால் அவரது தந்தை, சகோதரர் சென்று பார்த்துள்ளனர். அஸ்வினி மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். ரத்தம் உறைந்து கிடந்தது. அவர் தாக்கப்பட்டு பல மணி நேரம் இருக்கும் என்பதால் உடனடியாக பொன்னேரிக்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தலை மற்றும் கழுத்து பகுதியில் காயங்களுடன் பேச முடியாமல் இருந்த அவர் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பொன்னேரிக்கரை போலீசார் தடயங்களை கைப்பற்றி குற்றவாளிகளை தேடினர். முதல் கட்ட விசாரணையில் அஸ்வினி வீட்டில் 8 பவுன் நகை மற்றும் 75 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரிந்தது. வாக்கு மூலம் மற்றும் விசாரணை அடிப்படையில் போலீசார் கூறுகையில், அஸ்வினி இரவில் வீட்டுக்கு சென்ற போதே அங்கு மர்ம நபர்கள் இருந்துள்ளனர். திருட்டை தடுக்க அஸ்வினி முயற்சித்து உள்ளார். ஆனால் அவர்கள் அஸ்வினி சத்தம் போட முடியாதபடி கழுத்து மற்றும் தலையில் தாக்கி நகை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்றனர். இந்த சூழலில் ஐசியூவில் இருந்த அஸ்வினி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். கொலை வழக்காக மாற்றி கொலையாளிகளை தேடினர். நேற்று போலீசாரின் வாகன சோதனையில் காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் சிக்கினார். இவர் அஸ்வினி வீடு அருகே சுற்றி திரிந்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. கைது செய்து விசாரித்தனர். அப்போது அவன் கூறியதாவது, சம்பவத்தன்று இரவு தமிழ்வாணன் அவனது கூட்டாளியுடன் அஸ்வினி வீடு அருகே உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளான். பின் போதையில் பூட்டி இருந்த அஸ்வினி வீட்டுக்குள் கொள்ளை முயற்சியில் இறங்கி உள்ளனர். எதிர்பாராத விதமாக அஸ்வினி அங்கு வந்ததால் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. தமிழ்வாணனுக்கு இது முதல் திருட்டு சம்பவம் என கூறப்படுகிறது. அச்சத்தில் என்ன நடந்தது என்று பார்க்க சம்பவம் நடந்த வீட்டை வேவு பார்க்க திரும்பி வந்த போது போலீசிடம் சிக்கி உள்ளான். தலைமறைவாகிய அவன் கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர். அவன் மீது சில திருட்டு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இன்று அஸ்வினி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் பொன்னேரி கரை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். கைது செய்தவரை காட்ட சொல்லியும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் வாக்குவாதம் செய்தனர். போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.